November 25, 2010

ஒருநாள் பூவாய் மலர்வேனோ;

சிலந்தி கூட்டுக்குள்
சிறைபட்ட சிறுவண்டாய்

சிக்கிக்கொண்டும் மனது
சிரிக்கிறதே என் கண்மணி;

கொட்டும்போது கூட
வலிக்கவில்லை,இனிக்குதடி;

வருடக்காதல் உன்னொரு சொல்லில்
வருடுமா மெல்லிய இறகாய்;

வளைந்த பாதை திரும்பாது
வாடிய மலரும் அரும்பாது

எத்தனை பெண்களை பார்த்தாலும்
அத்தனை முகங்கள் நீயாகி

மனதெனும் பெரும் காட்டில்
எரிகிறாய் அணையா தீயாகி!

வர்ணம் போன பட்டாம்பூச்சி
வேகம் இல்லா நீர்வீழ்ச்சி

நான்கூட இவைதானோ-பெண்ணே
உன்நிழல் இன்றி போவேனோ;

உன்பார்வை எனும் பூங்காவில்
ஒருநாள் பூவாய் மலர்வேனோ;

January 6, 2010

I LOVE YOU ALL !!!


வேற்று மாநிலம், வேற்று மொழி கடந்து, இப்போது கடல் கடந்து திரவியம் தேடி வேற்று நாடு, வேற்று மக்கள் பழகி இன்னும் மூன்று நாட்களில் என் சொந்த மண்ணுக்கு வரப்போகிறேன். இரண்டு ஆண்டுகள் முடியப்போகிறது இங்கு வந்து. மூன்று முறை என் இந்தியாவிற்கு விடுமுறைக்காக வந்து சென்றிந்தாலும் இப்பொழுது எட்டு மாதங்கள் கழிந்தநிலையில் என் ஆருயிர் மனைவி, அன்பான அப்பா, அம்மா, இரண்டு தம்பிகள், நண்பர்கள், உறவினர்களை பார்க்க வரப்போகும் இந்த மகிழ்ச்சி ஏற்கனவே வந்து சென்றிருந்த அந்த மூன்று விடுமுறைக்காலத்தை விட சிறந்ததாய் கருதுகிறேன்.

என் நெருங்கிய நண்பர்களுக்கும், என் பழைய இடுகையை படித்துணர்ந்த சக பதிவுலக நண்பர்களுக்கும் தெரியும் இம்மற்றற்ற மகிழ்ச்சிக்கு காரணம்.

கிட்டதட்ட மறுப்பிறவியெடுத்த மனநிலையில்தான் நான் வருகிற சனவரி ஒன்பதாம் தேதி அதிகாலை ஈராக் தலைநகர் பாக்தாத்திலிருந்து சென்னைக்கு வரப்போகிறேன்.

அந்த சம்பவத்தை நான் பெரிதுபடுத்தி சொல்வது போலிருக்கலாம் அல்லது உங்களுக்கு மிக சாதாரணமாக தோன்றலாம். எப்படியிருந்தாலும் எனக்கு அந்த சம்பவம் ரொம்ப புதிதும், அனுபவித்துணர்ந்ததும்.

எனக்கு மூன்று வாரமே விடுமுறை கிடைத்திருந்தாலும் அதை ஒவ்வொரு கணங்களாய் அனுபவிக்கப்போகிறேன். முடிந்தால் பதிவுலக நண்பர்களை பார்க்க முயற்சிக்கிறேன்.

இந்த விடுமுறைக்காக என் சம்மந்தப்பட்ட அலுவலக வேலைகளை முடித்துக்கொடுக்க வேண்டியிருந்ததால் கடந்த பல நாட்களாக என்னால் இடுகை இட முடியவில்லை; உங்களின் இடுகைகளையும் படித்து கருத்தும் சொல்ல முடியவில்லை. விடுமுறை காலங்களிலும் வலைப்பூவிற்கு வரக்கூடிய நேரம் அமையுமா என்று தெரியாது.

காலம்/அனுபவம் தரும் பாடங்களை எந்த கல்லூரியும் கற்றுக்கொடுப்பதில்லை. பொதுவாக கல்விக்கூடங்களில் பல மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்தான் பாடம் சொல்லித்தருவார். ஆனால் நம் வலைப்பூ எனும் அழகிய கல்விக்கூடத்தில் ஒரு மாணவனாக என்னையும், எனக்கு பாடம் சொல்லித்தரும் அன்பு ஆசிரியர்களாக உங்கள் அனைவரையும் பார்க்கிறேன்.

நான் துவண்டு, சோர்வுறும் நேரங்களில் ஆறுதலாய் அரவணைத்து கனிவு சொற்களால் என்னை புதுப்பித்துக்கொண்டே வரும் என் மனைவி, குடும்பம், நண்பர்களுக்கு 'நன்றி' சொல்ல மாட்டேன், மாறாக 'I love you all' என்று சொல்ல விரும்புகிறேன்..தவறில்லையே !!!