December 31, 2009

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.



 
 
 

என் இனிய சக நண்ப நெஞ்சங்களுக்கு,
 
உங்களுக்கும்,உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் அன்பு நண்பன் பூங்குன்றனின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இந்த ஆண்டு முதல் நம் எல்லோருக்கும் மகிழ்ச்சி பூத்துக்குலுங்க இயற்கை கடவுளை வேண்டுகிறேன்.
அலுவலக பணிச்சுமை காரணமாக உங்களை கடந்த ஒரு வாரமாக சந்திக்க முடியாமல் இருந்தாலும், இன்னும் ஓரிரு வாரங்களில் சந்திக்க இருக்கிறேன் புத்தும் புது ஆண்டில்....
 
நட்புடனும்,அன்புடனும்,
உங்கள் பூங்குன்றன்.வே

December 22, 2009

காதல் ஞானி !!!


 
நெடுவானத்தில் நீண்ட
கொடிமரத்து நுனியில்
அமர்ந்திருக்கும் பறவை
அறிய வாய்ப்பில்லை;

புகைகக்கி போகும்
புகைவண்டி சப்தத்தில்
மிச்சமிருக்கும் அதிர்வு
அறிய வாய்ப்பில்லை;

பதுங்கி மெதுவாய்
பகலை தின்றமயக்கத்தில்
படுத்திருக்கும் இரவு
அறிய வாய்ப்பில்லை;

பெண்மீது கொண்டகாதல்
பித்தனாக்கி சித்தனாக்கி
பாதைமாற்றி போதைஏற்றி 
பின்பு ஞானியாக்கும் என்று!!!

December 20, 2009

எஞ்சாமி எங்க போச்சு ?



பகல் உழைச்சு இரவு தூங்க
நோவுக்கு தைலம் தேச்சி
காத்தால எந்திரிச்சா
கடன்கொடுத்தவன் கண்ணெதிர;
ஆயிரம் பொய் சொல்லி
அன்னிக்கும் வேலைக்கு போயி
ஐஞ்சு பத்து கூலிக்கு
இடுப்பொடிந்து வேலைசெஞ்சு
ஊட்டுக்கு சுருக்கா வந்து
உப்புபோடாம கஞ்சி குடிச்சி
உலக்கைய தலையில் வைச்சு
பாதிவுறக்க அசதியில
படுத்துக்கினு இருக்கறப்ப
மாராப்பு வெலக்கி இடுப்பை நெருக்கினவனை
பதறிபோய் பார்த்தா
'கம்முன்னு கிடந்தா கடனை அடைசிரலாம்'
கடன்கொடுத்த ராசா சொல்லுறப்ப
சுருக்குன்னு கோவம் தலைக்கேறி
பிஞ்சுபோன செருப்பாலடிச்சி
துரத்திவிட்டு நினைச்சுக்கிட்டேன்
எஞ்சாமி எங்க போச்சு;
கல்லாவே மாறி போச்சு !!!

December 18, 2009

ஒரு காதல் கதையும், சம்மந்தமில்லா ஒரு கவிதையும்.....





அது ஒரு அக்டோபர் மாதம்,வருடம் 1998.

கிராமத்தில் பிறந்த அந்த இளைஞன்,பட்டயப்படிப்பு முடித்ததும் வேலை தேடி அப்பாவின் மாணவர் ஒருவரின் வற்புறுத்தலினபேரில் பெங்களூர் நோக்கி பயணமாகிறான். கனவுகளும்,ஆசைகளும் நிறைந்த பயணம் அது.எதையோ சாதிக்க போகிறோம் என்கிற திமிர் அவன் கண்களில் தெரிந்தது.பெங்களூர் சென்ட்ரலில் வந்து இறங்கி தந்தை கொடுத்த முகவரியில் அந்த அண்ணா இருந்தார்.

என்ன சூர்யா?(இது நிச்சயம் இந்த கதையின் நாயகன் பெயராகத்தான் இருக்கும்). ஸ்டேஷன்ல இறங்கி ஒரு போன் பண்ணியிருந்தா நானே வந்து கூப்பிட்டு வந்திருப்பேனே?இல்லைண்ணா, பரவாயில்ல, உங்களுக்கு எதுக்கு சிரமமும் என்று நானே வந்துட்டேன்.

இன்னும் நீ மாறவில்லையா சூர்யா?மத்தவங்களுக்கு அதிகம் சிரமம் கொடுக்கமாட்டேன் என்னும் அந்த நினைப்பு சின்ன வயசில உங்கிட்ட பார்த்தது. இன்னும் நீ மாறல போல. சரி,கைகால் அலம்பிட்டு வா,சாப்பிடலாம் என்றார்.அவன் எப்பவும் இப்படித்தான். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்பது கூச்ச சுபாவம் என்றாலும் சூர்யாவை பொறுத்தவரை அது மற்றவர்களுக்கு நாம் தரும் சிரமம் என்று நினைக்கிற ரகம். தேவையானதை வீட்டில் கூட வாய்திறந்து கேட்ட மாட்டான்,நண்பர்கள் தவிர பிறரிடம் ரொம்ப சாதுவாக இருப்பான்;அதிகம் பேசமால் எதையோ எழுதிக்கொண்டு, படித்துக் கொண்டு இருக்கும் ரகம்;தம்பிகள் எதாச்சும் வலிய வந்து செல்ல சண்டை போட்டாலும் சிரித்துக்கொண்டே அவர்களின் வெற்றியின் மீது அதிக கவனம் வைக்கும் ரகம்;நீங்கள் எவனுக்கு எதிர்மாறாக இருந்தால் அது சூர்யாவின் தவறல்ல.ஒருவேளை நீங்கள் அவனைப்போலவே இருக்கும் ரகம் என்றாலும் அது சூர்யாவிற்கு மகிழ்ச்சி அல்ல.

நாளைக்கு என்கூட ஆபிஸ் வா.அங்கே எனக்கு தெரிந்த சில கஸ்டமர்ஸ் வருவாங்க, அவர்களிடம் எற்கனவே உன் வேலைய பத்தி பேசிட்டேன்,நாளைக்கு வரும் போது பேசலாம்ன்னு சொன்னாங்க.சரியா சூர்யா?
சரிண்ணா.நாளைக்கு நானும் உங்ககூட வரேன்..

மறுநாள் காலை அவருடன் அலுவலகம் சென்றதும் அங்கே இருந்தவர்களை அறிமுகப் படுத்தினார் ராமன்.கடைசியில் அவளிடம் வந்தார், மீனா, இவர் என்னோட தம்பி சூர்யா. ஊர்ல இருந்து வேலைக்காக வந்திருக்கான்..சூர்யா..இவங்க பெயர் மீனா, தமிழ்நாடு தான் பூர்விகம், நல்லா தமிழ் பேசுவாங்க.. சரி.. நீங்க பேசிட்டு இருங்க,நான் போய் என் வேலையை கவனிக்கிறேன்..

ஹாய் சூர்யா,எந்த ஊர் நீங்க?என்ன வேலை தேடுறீங்க?என்ன படிச்சிருக்கீங்க? உட்காருங்க,ஏன் நின்னுட்டே இருக்கீங்க?

படபடவென பேசிக்கொண்டே இருந்த மீனாவை எந்த பதிலும் பேசாமல் பார்த்துக்கொண்டே  இருந்தான் சூர்யா.

தலைவா,உங்க கிட்டதான் பேசிட்டிருக்கேன்,என்ன ஆச்சு?

ஹாங்..ஒண்ணுமில்லை மேடம்..

மேடமா, ஹல்லோ, கண்டிப்பா நான் உங்களைவிட சின்னபொண்ணுதான்னு நினைக்கிறேன், அப்படியே ஒருவேளை ஒண்ணு,ரெண்டு வயசு கூட என்றாலும் இந்த ஊர்ல மேடம்ன்னு கூப்பிட்டா...உதைப்பாங்க..தெரியுமா?

ஓஹோ..தெரியாதே மேடம்...சாரி...மீனா..

ஓகே..எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..நான் இன்னும் ஐந்து நிமிடத்தில் உங்ககிட்ட பேசுறேன்..நீங்க இந்த பேப்பரை பாருங்க.

'டைம்ஸ் ஆப இந்தியா'வை என் கைகளில் திணித்த அவளை ஒரு முறை பார்த்துவிட்டு சேரில் அமர்ந்து செய்திகளில் மூழ்கிவிட்டேன்...

ஹல்லோ...சூர்யா..இங்க வாங்க..இந்த மெய்ல பாருங்க..ஒரு லூசுப்பையன் ஆங்கிலத்தை எப்படி கொலை பண்ணி அனுப்பிருக்கான்?

சரிங்க..

என்ன சிரிக்கமாட்டீங்களா? இல்ல..பயமா இருக்கா? நான் ஒண்ணும் உங்களை கடிச்சுட மாட்டேன்..

இல்லங்க..அப்படில்ல..நான் அண்ணனை பார்த்துட்டு வரேன்..

ஓகே சூர்யா..

அப்பாடா தப்பித்தோம் என்று ராமன் அறைக்கு சென்றான்.

ஸாரி சூர்யா..கொஞ்சம் பிஸிப்பா..எதாச்சும் வேணுமா?மீனா என்ன சொல்றாங்க?

எதுவும் வேணாம்...ஜஸ்ட் நீங்க பண்ற வேலைய பார்க்கலாம்ன்னு இங்க வந்தேன்..தப்பா?

ச்சே.. ச்சே.. நீ உட்காரு.. இன்னும் ஒரு மணி நேரத்தில் ஒரு விஷயமா நான் சொன்ன கஸ்டமர்ஸ் வந்துடுவாங்க... ரெசூமும், சர்ட்டிபிகேட்ஸ் கைல இருக்குல்ல..

ரெடியா இருக்கு அண்ணே.

ஒரு மணி நேரம் கழித்து வந்த கஸ்டமர்ஸ் அவங்க வேலையை முடித்ததும், அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.

அரை மணி நேர நேர்முக தேர்வு மாதிரி முடிந்ததும்..நீங்க எப்ப ஜாயின் பண்றீங்க மிஸ்டர்.சூர்யா?

நாளைக்கே ஸார்.

குட்.இதான் நம்ம கம்பெனி அட்ரஸ்.நாளைக்கு ஷார்ப் ஒன்பது மணிக்கு வந்துடுங்க.

தேங்க்ஸ் ஸார்.

அந்த கம்பனியில் சேர்ந்து இரண்டு மாதத்தில்,மீனாவிடம் இருந்து குறைந்தபட்சம் ஒரு இருபது கால்ஸ் வந்திருக்கும்..நிறைய பேசினோம்..இல்லை..என்னை பேச வைத்தாள்.

மொத்த பெங்களூரையும் சுற்றி காட்டினாள்;குறிப்பாக கப்பன் பார்க்,பன் வேர்ல்ட்(Fun world) இரு இடங்களும் எங்களை நன்கு அறிந்தவை; கப்பன் பார்க்கில் உள்ள பூக்கள் வாரம் இருமுறை பூக்காது. காரணம் மீனா அந்த நேரத்தில் என்னுடன் பூங்காவில் இருப்பாள். பேச்சு.. பேச்சு.. எப்போதும் எதைப்பற்றியாவது பேசிக்கொண்ட இருக்கும் வகை அவள்; கேட்டுக்கொண்டே ரசிக்கும் ரகம் நான்;இப்படியே தொடர்ந்து மூன்று மாதங்கள் கடந்தது.

ஒரு சாயங்கால சனிக்கிழமை,ஹெப்பாலா சாலை ஓரம் நடந்துக்கொண்டு வழக்கம் போல பேசிக்கொண்டே வந்தவள் பேச்சையும், நடையையும் நிறுத்தி என் கண்களை சில வினாடிகள் பார்த்தாள்.

என்ன மீனா?என்ன ஆச்சு?

ஹ்ம்ம்..ஒண்ணுமில்லை....பார்க்கனும்ன்னு தோணிச்சு.

என்ன திடீர்னு இப்படி?

ஏன் நான் பாக்கக்கூடதா சூர்யா?

ச்சே..ச்சே..அப்படில்ல.என்னவோ நீ பண்றது புதுசா இருந்துச்சு..அதான் கேட்டேன்.
.......
.......
என்ன மீனா..பேசாம வர?

ஒண்ணுமில்லை..

சில அடிகள் நடந்ததும் அவன் கைகளை மீனா கோர்த்ததும் சூர்யா அதிர்ந்து விரல்களை பிரிக்க முயல்கையில் மீனா இன்னும் அழுத்தம் காட்டி கெட்டியாக கோர்த்துக்கொண்டாள்.

என்ன மீனா இது?

சூர்யா..என்னால வாய்திறந்து சொல்ல பயமா இருக்குப்பா.உன் கைப்பிடித்த காரணம் இப்போ புரியும்ன்னு நினைக்கிறேன் என்றவள் மறுபடியும் என் கண்களை பார்த்தாள்.அந்த பார்வை ஆயிரம் கதைகளை சொல்லியது..

புரியுது மீனா.இது எப்போலேர்ந்து?

தெரியல..ஆனா ரெண்டு மூணு நாளாவே உங்கிட்ட எப்படியாவது சொல்லனும்ன்னு ட்ரை பண்ணேன்.பட் வார்த்தை வரல.உனக்கு என்னை பிடிச்சிருக்கா சூர்யா?

என்ன சொல்றதுன்னு தெரியல மீனா.

நீ எதுவும் சொல்லவேணாம்டா.இப்படியே ஆயுசு முழுக்க உன் கைய பிடித்துக்கொண்டே இருந்தா போதும் சூர்யா..

ஹ்ம்ம்..சரி..மீனா.

(இதற்குமேல் கதையை எப்படி முடிப்பது என்று நன்றாக தெரியும்; உண்மையில் இந்த காதல் ஜோடிகள் காலமாற்றத்தால்,சூழ்நிலையால் பிரிந்துவிட்டனர்.தற்போது மீனாவுக்கும்,சூர்யாவுக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை;என்றேனும் ஒருநாள் பார்க்கையில் இருவரும் பேசலாம்,அழலாம் அல்லது பார்த்தும் பேச பிடிக்காமல் தங்கள் பாதை நோக்கி போகலாம்; இது உண்மைக்கதையும்,  இருவரும் தங்களுக்குள் அவரவர் காதலெனும் உயிர்ப்பூவை இன்றளவும் பாதுகாத்துக்கொண்டே வரும் உண்மையும்;)

ஆனால் இந்த சூர்யா,மீனா காதலை பிரிக்க இந்த கதையை எழுதிய நான் விரும்ப வில்லை..என்னைப்பொருத்தவரை சூர்யாவின் கைகளை கோர்த்த மீனா இன்னும் பிடித்துக்கொண்டே இருக்கிறாள்.சூர்யாவும் மீனாவின் கையை அழுத்தமாக இன்னும் அழுத்தமாக பிடித்துக்கொண்டே இருக்கிறான்.. பாவம்,அப்படியே அவர்கள் காதலித்துக்கொண்டே இருக்கட்டுமே...

கவிதை எழுதாம மனசும்,கையும் சும்மா இருக்கமாட்டேங்குங்க.

நினைப்பின் ஊடே
நீண்ட தூர அலைகடலில்
நீந்தி கரையேற துடிக்கிறேன்;

மங்கிய நிலவொளியில்
தொலைத்த உன் இதயத்தை
கிடைக்காதென தெரிந்தும் தேடுகிறேன்;

பனிவிழும் பூங்காவில்
கால்தடம் தேடி காதலித்த
கணங்களை காண காத்திருக்கிறேன்;

வரமாட்டாய் என தெரிந்தும்
மனசு கேட்காமல்
வீறிட்டு அழுகிறேன்;

December 16, 2009

கலியுக பூசாரி !!!


(இந்த கவிதை எந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது என்று தலைப்பையும்,கவிதையின் கடைசி வரியையும் படித்தாலே தெரியும்..)

காதல் நீரோடையில்
தேங்கிய காமத்தை
எடுத்து பருக
நெருங்கி வந்து
நெற்றி பொட்டில்
முத்தம் பதித்து
முன்னுரை எழுதா
முதல் இரண்டு
பாகத்தை தொட்டுதிறக்கையில்
பதுங்கிய உன்வெட்கம்
பாய்ந்து விலக
கண்கள் சொருக
அனல்மேல் துடித்து
அழுந்திய உடல்கள்
அமிர்தம் குடிக்க
அகிலமும் மறந்து
சகலமும் துறந்து
தரையில் சாய்கையில்
தலையில் முட்டியது
கோவில் மூலஸ்தானம்;

December 14, 2009

கவிதைகள்: ஒரு ஸ்வீட்; ஒரு சோகம்;




ஸ்வீட் :
கல்லூரி தேவதையாமே நீ;
கனவு கன்னியாமே நீ;
உன் ஒருபார்வை பொருட்டு
தவம்கூட கிடக்கிறார்களாமே;
நண்பர்கள் என்னிடம் சொல்கையில்
நகைப்புக்கு அளவே இல்லை;
என்றோ பூத்த நம் காதலை
எப்படி சொன்னால் நம்புவார்கள்!!!

 

 















சோகம்:  
ஒற்றை மேகத்தில்
ஒளிந்திருக்குமோ;
திசைமறந்த கிழிந்த காகிதமாய்
தெருவோரம் அலைபாயுமோ;
வெட்டிய மின்னளிடுக்கில்
வேகமாய் மறைந்திருக்குமோ;
சொல்ல பயந்த என் காதல்;

December 13, 2009

காதல் வலியது !!!


உன்மீதான என்காதலை
என்னுள் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்;
என்றேனும் ஒரு நாள்
எதிர்பாரா சந்திப்பில்
நிராகரிப்பின் வலியினை
நீயும் அறியக்கூடும்
கொண்ட காதலை திருப்பி தருகையில்...


நம் முன்னொரு காதல் காலங்களில்
நீ கொடுத்த காதல் கடிதங்கள்,பரிசுகள்;
இன்றொருநாள் கோபத்தில் எரிக்கையில்
தீ ஏனோ வான் முட்ட எரிகிறது;
திருஷ்டி பட்டிருக்குமோ ?

December 12, 2009

உயிரின் ஆணிவேர் மனைவியானால்...



ஐ.எஸ்.டி கால் போட்டு
அப்பா,அம்மா,அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை....
பேசி முடித்து
பில் பார்த்து பதறி
வைக்க போறேன்னு சொல்லும் சமயம்
'உடம்பை பத்திரமா பார்த்துக்குங்க'
ஒற்றை வரியில் என் உயிரின் ஆணிவேரை
ஒரு நொடி அசைத்துப்பார்க்கும்
மனைவிக்கு
மறுஜென்மம் நான் தாயாக வேண்டும்;

December 11, 2009

"LOVE YOU DADDY"- குட்டி கதை.

இப்போ நான் உங்களுக்கு ஒரு சிந்தனையை தூண்டும் ஒரு கதை(பாடம்) சொல்ல போறேன். கவனமா படிங்க.



ஒரு காலை வேளையில் அலுவலகம் செல்வதற்காக ஒரு அப்பா தன்னுடைய புது காரை மிகுந்த பக்குவத்துடன் துடைத்து கழுவிக்கொண்டிருந்தார்.அப்பாவுடன் அந்த நான்கு வயது நிறைந்த மகனும் இருந்தான்.

அப்பா துடைத்துக்கொண்டிருப்பதை பார்த்த அந்த மகன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரில் என்னவோ கிறுக்கி கொண்டிருந்தான்.
இதை கண்ட அப்பா கடும்கோபம் கொண்டு சற்றும் யோசிக்காமல் கையில் கிடைத்த ஒரு இரும்பு கம்பி என்பதை உணராமல்(கோபம் கண்ணை மறைக்குமே)தன் மகனின் கைகளில் ஓங்கி அடித்துவிட்டார்.வலியில் அந்த சிறுவன் கதற துவங்க,அம்மாவும் உள்ளிருந்த ஓடிவர,அடித்த அப்பாவும் தன் மகன் கதறுவதை பார்த்ததும் உடனே அவனை வாரியெடுத்து காரில் போட்டு மருத்துவமனைக்கு சென்றார்.  

சிறுவனை சோதித்த மருத்துவர்கள் அடி பலமாகபட்டிருப்பதால் இரண்டு விரல்களை எடுத்தே ஆக வேண்டுமென்று சொல்ல,அப்பா அதிர்ந்தே போனார்.எவ்வளவோ முயன்றும் மருத்துவர்கள் சொன்னபடி இருவிரலை எடுத்தும் விட்டார்கள்.

சற்று நேரம் கழித்து அந்த சிறுவன் அப்பாவிடம் "எப்பப்பா எனக்கு இந்த ரெண்டு விரல் வளரும்?"வினவ,அப்பா அழுதுகொண்டே வேகமாக வெளியில் ஓடிவந்து தன் காரை காலால் எட்டி உதைத்தான்.அப்போதுதான் தன் குழந்தை கிறுக்கிய வாசகம் கண்ணில்
பட்டது."LOVE YOU DADDY".

கோபமும்,அன்பும் எல்லை அற்றது(NO LIMITS).எந்த உணர்ச்சிகளையும் நாம் அளவாக கையாண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.தெளிந்த நீரோடை போல அழகாக இருக்கும்.முன்பு:"பொருட்கள் என்றால் உபயோகப்படுத்துவதற்காக"-"மக்கள் என்றால் அன்பு காட்டுவதற்காக"...இன்றோ:"பொருட்கள் என்றால் அன்பு காட்டுவதற்காக"-"மக்கள் என்றால் உபயோகப்படுத்துவதற்காக"....

சிந்திப்போம்.மகிழ்ச்சியாக இருப்போம்.

December 10, 2009

ஒரு சொல்லில் நான்கு மழலை கவிதைகள் !!!


ஒண்ணு
ரெண்டு
மூணு
ஏழு
எட்டு
ஐந்து...
ரசித்தேன்
குட்டவில்லை;

தூண்
துரும்பு
கல்
கோவில்;
தெய்வம்
சிலசமயம்
கருவிலும்...

அப்பா
அம்மா
யார்பிடிக்கும்?
கேர்ள்பிரண்ட்
என்றது
மழலை;

எருமை
பன்னி
நாய்
எதுபிடிக்கும்?
அப்பா
என்றது;
அதுசரி
அம்மாவை
அச்செடுத்த
அழகுமழலை;

December 9, 2009

அன்பு தோழியின் அழகு கவிதைகள்- சிறு அறிமுகம்.



என்னை வலை உலகிற்கு அறிமுகப்படுத்திய என் அன்பு தோழி கல்யாணி பாஸ்கரின் கவிதைகள் இங்கே உங்கள் பார்வைக்கு..
என் தோழி நிறைய கவிதைகள் எழுதியிருந்தாலும் எனக்கு பிடித்தமான கவிதைகள் இவை.
தற்சமயம் அவர் நேர பற்றாக்குறையால் தொடர்ந்து எழுத முடியாவிட்டாலும் கூடிய விரைவில் புதுப்பொலிவுடன் தன் வலைப்பூவை தொடர்வார்.(கல்யாணி...கம் அகைன்)
(எழுத்துக்கள் தெளிவாக தெரிய படங்கள் மீது கிளிக் பண்ணுங்கள்.)









December 8, 2009

நான்கு மெழுவர்த்திகள் நமக்கு கற்று தரும் நம்பிக்கை !!!




ஓர் இருட்டு அறையில் நான்கு மெழுகுவர்த்திகள் ரம்மியமான அழகோடு ஒளிவீசி கொண்டிருந்தன. சற்று நேரம் சென்றதும் அந்த நான்கில் மூன்று பேச ஆரம்பித்தன.

முதல் மெழுகுவர்த்தி "அமைதி" :
இவ்வுலகில் அமைதி என்கிற நான் இல்லை. எங்கு பார்த்தாலும் சண்டை,வன்முறை, தீவிரவாதம்,கடன் என இருக்கின்றன.அப்படிப்பட்ட உலகில் நான் வசிக்க விரும்பவில்லை என்றவாறு அணைந்துபோனது.

இரண்டாவது மெழுகுவத்தி "உண்மை":
இவ்வுலகில் உண்மை என்கிற நான் இல்லை. எங்கு பார்த்தாலும் பொய்,குழு சண்டை,தேர்தல் வாக்குறுதி, இலவசம் என்றே இருக்கின்றன.அதனால் இங்கு வசிக்க விரும்பவில்லை என்றவாறு அணைந்துபோனது.

மூன்றாவது
மெழுகுவத்தி "அன்பு":
இவ்வுலகில் அன்பு என்கிற நான் இல்லை. எங்கு பார்த்தாலும்  என்றே பணம்,சுயநலம்,அடிதடி என்பதே பிரதானமாக இருக்கின்றன.நீங்கள் இருவர் மட்டுமின்றி நானும் அணைந்து போனால்தான் இம்மக்களுக்கு புத்தி வரும்,அறியாமை என்கிற இருளில் கஷ்டபடட்டும் என்றபடி தன்னை அணைத்துக்கொண்டது.

இந்த மூன்றும் அணைந்த நிலையில் ஒரு மழலை அந்த அறைக்கு வந்து,அணைந்திருந்த அந்த மூன்று மெழுகுவர்த்திகளை பார்த்தபடி எரிந்து கொண்டிருந்த நான்காவது திரியிடம் சென்றது.மூவரும் ஏன் இப்படி அணைந்தனர் என வினவியது.

நான்காவது மெழுவர்த்தி "நம்பிக்கை":
கவலைப்படாதே! நம்பிக்கை என்கிற நான் விடாமுயற்சியுடன் எரிந்து கொண்டிருக்கிறேன்.அணைய மாட்டேன்.அணைந்து போன அமைதி,உண்மை,அன்பு இவற்றை நம்பிக்கை என்கிற என்னை கொண்டு நீ மறுபடியும் ஏற்ற முடியும்.நீ செய்வாயா என்றது.

இதை கேட்ட அந்த மழலை தன் பிஞ்சு கரங்களால் நம்பிக்கை ஒளி கொண்டு மற்ற மூன்றையும் ஏற்ற ஆரம்பித்தது. அறை முழுதும் பிரகாசமானது.


அமைதி,உண்மை,அன்பு மூன்றும் பெரிதுதான் என்றாலும் நம்பிக்கை என்ற ஒளி கொண்டு தான் அடைய முடியும் என்பதை அந்த மழலை உணர்ந்தது. நாம் எப்போது உணர போகிறோம்?

December 7, 2009

கடவுள் ஏன் கல்லானான்?




குருதி ஆற்றில் கால் நனைத்து
குழு பிணங்களின் வாசனையில்
காயமுற்றவனின் முதுகின் மீதேறி
கனவுகளையும்,மண்ணையும் விட்டு
திக்கற்று திசையற்று
கண்கெட்டும் தூரம் வரை
கால்கள் நோக நடக்கிறோம்
கடவுளென பூஜைகள் செய்த
அந்த கல்லையும்  தாண்டி......

December 6, 2009

இன்னமும் அங்கேயே அவர்கள்...



காலை எழுந்து அலுவலகம் செல்ல
காலுறை அணியும்போது
வந்து தொலைக்கிறது எவனோ
ஒருவனின் செருப்பில்லாத கால்கள்.

நீண்ட வருடங்கள் தவம் செய்து
பெற்றெடுத்த பிள்ளை அவளை
முதியோர் இல்லத்தில் சேர்க்கையில்
பெற்றவளின் மனசு குளிருமோ ?

பெய்யும் மழைக்கு ஹீட்டர் போட்டு
பெரிய எல்.சி.டியில் புதுப்பட டி.வி.டி
இலவச டிவியில் ஒன்றும் வராமல்
தவிப்பானோ முக்காடிட்ட குடிசைவாசி?

மொபைல் லேப்டாப் வீடு தங்கம்
கார் வாங்க லோன் போடணும்
வேர்வை நாற்றமின்றி இன்றொரு நாள்
புணர்ச்சி செய்யணும் மல்லிகைப்பூ கடன்வாங்கி..

December 5, 2009

உன் பேர் சொல்ல ஆசைதான்.....

குவைத் ஏர்போர்ட் வாசல் வரை வந்த சதீஷ்,என்னை டிராப் செய்ததும் கிளம்ப தயாரானான்.

சூர்யா..ஊருக்கு போயிட்டு எல்லோரையும் கேட்டதா சொல்லு.நான் வரேண்டா.

டிராப் பண்ணதுக்கு தேங்க்ஸ் மச்சி.நீயும் ஊரை சுத்தாம வேலைய மட்டும் பாரு.நான் கிளம்பறேன்.. ப்ளைட்டுக்கு நேரம் ஆச்சு.

ஏர்போர்ட்டில் நுழைந்து, சென்னை செல்லும் விமானத்தில் லக்கேஜ் அனைத்தையும் போட்டு,போர்டிங் பாஸ் வாங்கி,செக்-இன் முடிந்து வெய்டிங் ஹாலுக்குள் நுழைந்து இருக்கையில் அமர்ந்து மணி பார்க்கையில் ஏழு காட்டியது.விமானம் புறப்பட இன்னும் ஒரு மணிநேரம் இருக்கிறது.இரவு நேரம் என்பதால் குளிர் கொஞ்சம் அதிகமாக இருந்தது. ஏ.ஸியை கொஞ்சம் குறைத்து வைத்து இருக்கலாமோ?

ஆப்பிளில் பிடித்த பாடல்கள் என் காதுகளை ரீங்காரமிட்டு கொண்டு இருந்தது.கண்களை மூடி என் முன்னாள் காதலியை பற்றிய நினைவுகளை அசை போட்டுக்கொண்டே இருக்கையில் மொபைல் ஒலித்தது.ஒய்ப் பெயர் திரையில் காட்டியது.

என்னம்மா...

எங்க இருக்கீங்க? ப்ளைட் ஏறிட்டீங்களா?

இல்லம்மா.இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு.பாப்பா என்ன பண்றா?

அவ தூங்கிட்டா.சரிங்க..பார்த்து வாங்க.ப்ளைட் உள்ள போன உடன் ஒரு போன் பண்ணிடுங்க..சரியா?

சரிப்பா பண்றேன்.வைச்சுடுறேன்.

போனை வைக்கவும் ப்ளைட்க்கு வரசொல்லி அழைப்பு வர வரிசையில் நிற்க ஆரம்பித்தேன்.

ஹே..ஹே..சூர்யா..ஓடாத..ஓடினா...அம்மா அடிப்பேன்.

தன் பேராக இருக்கிறதே என்று ஒரு கணம் ஆச்சர்யமாக திரும்பி பார்க்கையில் அங்கே மீனா ஒரு சிறு பையனை பிடிக்க ஓடிக்கொண்டு இருந்தாள்.

ஒரு நிமிடம் உலகை மறந்து சூர்யா நின்று விட்டான்.இவளை வாழ்நாளில் சந்திக்கவே கூடாது என்றல்லவா இருந்தோம்.இவள் இங்கே எப்படி?

அங்கே..இங்கே ஓடிய அந்த சூர்யா என்னிடம் வந்து என் கைகளை பற்றி இழுத்தான். என்னுடைய பேன்ட் பாக்கெட்டில் அவன் கைகளை நுழைக்க முயன்று கொண்டு இருக்கும்போதே மூச்சிரைக்க ஓடி வந்த மீனா 'ஸாரி ஸார்' என்றபடியே என்னை பார்த்து திடுக்கிட்டாள். சூர்யா..நீங்க..இங்க..எப்படி இருக்கீங்க?







நல்லாயிருக்கேன். நீ….நீங்க எப்படி இருக்கீங்க?

ஹ்ம்ம்.நல்லாயிருக்கேன்.அவன் என் பையன் தான்.பேரு சூர்யா.

ஓ..ஐ ஸீ. நைஸ் நேம்.

நானும் இதே ப்ளைட்ல தான் வரேன்.

அப்படியா..சந்தோஷம்..நான் கிளம்புறேன் மீனா.

சரி சூர்யா.இருவரும் பேசுவதையே பார்த்துகொண்டு இருந்த குட்டி சூர்யாவை கைப்பிடித்து
கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

விமானத்துக்குள் நுழைந்து சீட் பார்த்து உட்கார்ந்தான் சூர்யா.மனசு என்னவோ கொஞ்சம் பாரமாக இருப்பதுபோல் தோன்றவே கண்களை மூடினான்.

மனைவி போன் பண்ண சொன்னது ஞாபகம் வர,மொபைலை எடுத்து மனைவி பெயரை அழுத்தினான்.

டாடி..எங்க இருக்கீங்க? எப்ப வருவீங்க?

ஹை செல்ல பொண்ணு..நான் வீட்டுக்கு தான் வந்துகிட்டே இருக்கேன்.அம்மா எங்கே ?

அம்மா..டாடி கூப்பிடுறாங்க.வாங்க.

என்னங்க.ப்ளைட் ஏறிட்டீங்களா? நம்ம மீனா ரொம்ப சமத்துங்க.இப்பலாம் போன் வந்தா அவளே ஆன் பண்ணி பேசுறா.சரி.நீங்க சீக்கிரமா வாங்க.நான் வைச்சுடுறேன்.

போனை வைத்துவிட்டு ப்ளைட்டில் மீனாவை தேடினேன்...அவள் தன் பையன் சூர்யாவுடன்
ஏதோ பேசிக்கொண்டு இருந்தாள்.

ப்ளைட்டிலும் ஏஸி காற்று கொஞ்சம் அதிகமாக இருந்தது.

December 4, 2009

கவிதை மலரெடுத்து உனக்கு சூட்டுவேனடி ..

அந்தி மாலை நேரம்.மொட்டை மாடி.முழு நிலவாய் என் தலைவி.என் கண்கள் பார்த்து ஏதோதோ கதை அளாவிக்கொண்டு இருந்தவள் சட்டென ஒரு புள்ளி வைத்து என்னிடம் கேட்டாள்,மாமா,எனக்கு இப்போதே பூ ஒன்று வேண்டும் தலையில் சூட.சரி வாங்கி வருகிறேன்,என்கிறேன்.இல்லையில்லை எனக்கு இப்போதே வேண்டும் வேண்டும் என்கிறாள்.நம்மிடம் என்ன பூந்தோட்டமா இருக்கிறது உடனே பறித்துகொடுக்க,சற்று பொறு,கடைக்கு சென்று வாங்கிவருகிறேன் என்கிறேன்.நீங்கள் எனக்கு எல்லா பூவையும் வாங்கி கொடுத்துவிட்டீர்கள்.யாரும் வாங்கித்தாராத பூவொன்று இங்கயே வேண்டும் என பிடிவாதம் பிடிக்க,மனம் அன்பு தலைவிக்காக யோசித்தது.சற்று நேரம் சென்றதும், 'சரிம்மா,நீ கேட்ட அப்படி ஒரு பூ இருக்கிறது' என்றேன்.அப்படியா? என்ன பூ என என் தலைவி கேட்ட,நான் சொல்ல ஆரம்பிக்கிறேன்.

கொஞ்சம் காதல்
கொஞ்சம் காமம்
கொஞ்சம் ஊடல்
கொஞ்சம் தேடல்
இவை கலந்து
நிறைய முத்த நீரூற்றி
மன செடியில் பதிய வைத்து
மேகத்தில் ஒளிய வைத்த
கவிதை மலரெடுத்து
கண்மணி உனக்கு சூட்டுவேன் இதோ !!!

எனக்கு கடைசியில் கவிதைப்பூவையே தலையில் சூட்டுகிறீர்களா? கில்லாடி தான் நீங்கள்,இப்போதே சூட்டுங்கள் என்றவள் அருகில் வந்து கைகளை இறுகப்பற்றுகிறாள்;அந்த இறுக்கத்தில் உலகம் உள்ளவரை உன்னுடன் இருப்பேன் என்கிற அர்த்தம் புரிந்தது.எனக்கோ அந்த உலகமே என் உள்ளங்கையில் அடங்கியது போலிருந்ததது.வானத்து விண்மீன் எங்களை பார்த்து வெட்கத்தில் கண்சிமிட்டி விட்டு மறைந்தது.

December 3, 2009

என் முதல் ஆங்கில கவிதையும், கடவுளிடம் கேட்க இருக்கும் வரங்களும்.

என் முதல் ஆங்கில கவிதை.


HARSH BULL 


Generally my heart is gold
if Challenge
comes i will become lion
always i tell you the truth
always i do lot good

i get success and success
come we dance,sing and celebrate
we seek pleasure all the time
come we dance,sing and celebrate

one bull is staring at me
one more bull is coming back at me
i can win these two bulls
i don't have fear in my heart
i don't bother about anybody
will success come to me ??????




டிஸ்கி 1 : கண்டிப்பாக இது தலைவரின் 'பொதுவாக என் மனசு தங்கம்' பாடலின் ஆங்கில மொழியாக்கம் இல்லை.ஹி ஹி ஹி...

டிஸ்கி 2 : உனக்கு தமிழ்லயே ஒழுங்கா கவிதை எழுத வராது..இதுல இங்கிலீஷ்ல கவிதையா என்று துப்புவது சரியில்லை பாஸ்.வேணும்னா அடுத்தமுறை
ஹிந்தில கவிதை எழுதட்டுமா :)


            **********************
கடவுளிடம் கேட்ட வேண்டிய வரங்கள்:


கடவுள் என் முன்தோன்றினால் என்ன வரம் கேட்பது என்று யோசித்தேன்..கடவுளை நேர்ல நாம பார்ப்பதே ஒரு வரம்.
அவர் நம்மகிட்ட ஒரு பதிவோ,பின்னூட்டமோ போடாம தீடிரென வந்து கேட்டால் நான் மறந்து விட மாட்டேனா...
அதான்  ஒரு லிஸ்ட் போட்டு இருக்கேன்.


1) அமெரிக்க சம்பளம்
2) இங்கிலாந்து வீடு
3) இந்திய மனைவி
4) ஜப்பான் கார்
5) சைனீஸ் உணவு
6) பின்லாந்து மொபைல்
7) சுவிச்சர்லாந்து பணம்
8) ஆப்பிரிக்கா வைரம்
9) சிங்கப்பூர் விமானம்
10) தமிழ்மண விருது & தமிளிஷ் வோட்டு (ஹி ஹி ஹி) 



டிஸ்கி : முதல்ல உருப்படியான பதிவை போடணும்ன்னு வேண்டிக்க எருமை :)

December 2, 2009

துணை வேண்டி...(உரையாடல் கவிதைப் போட்டிக்காக)


துணை வேண்டி....


கடல் கடந்து உறவுகள் பிரிந்து
ஓர் அறையில் ஒற்றையில் காலம் போகையில்...

வந்த புதிதில் வந்த
பறவை,பூனை,பல்லி,எறும்பு,ஈ
இவைகள் யாவும்
இப்போது என்னுடன் இல்லை;

என்னை போல கடன் சுமை
காரணமாகி கடல் கடந்து போனதுவோ?
காதல் கொண்டு பின்பு கைவிட்ட
காதலி நினைவாய் ஏக்கமாய் திரிகிறதோ?

எங்கேனும் பார்த்தால்
என் வீட்டுப்பக்கம்
வர சொல்லுங்கள்
சற்று நேரம் ஆறுதலாக பேச....

December 1, 2009

இனிப்பு; காரம்; கொஞ்சம் தேநீர் : கவிதைகள்


     
     இனிப்பு
நீ சிரிக்கையில்
புதிதாய் பூத்த மலராய்
உன் புன்னகை;
நீ பிரிகையில்
மழைக்காக ஏங்கிக்கிடக்கும்
நிலமாய் மனது!!!

         காரம்
யாரோ தூக்கி எறிந்த
உபயோகிக்கமுடியாத
தெருவோர மிதிவண்டியை
நினைவுபடுத்துகிறது
நம் காதல் நாட்கள்!!!

      கொஞ்சம் தேநீர்
இப்பொழுதெல்லாம் கவிதை எழுத
அதிகம் சிந்திப்பதில்லை
காதலில் தோல்வி !!!

November 30, 2009

பள்ளியறை



பள்ளியறை 
*****************


உன்னை தீராத தாகத்துடன்
தின்று தீர்த்து முடித்து
சோம்பல் முறித்து
படுக்கையில் புரண்டு
ஆடைகள் அணியும்முன்பே
சட்டென எதற்காக

ஒரு துளி கண்ணீர் எட்டிப்பார்க்கிறது ?




 
                                                

November 29, 2009

பண பற்றாக்குறை-காரணம் என்ன?

பண பற்றாக்குறை  !!!



 

நான்

1000  ரூபாய் சம்பளம் வாங்கும்போது  பற்றாக்குறை  தான்
5000  ரூபாய் சம்பளம் வாங்கும்போது  பற்றாக்குறை  தான்;
10000 ரூபாய் சம்பளம் வாங்கும்போது  பற்றாக்குறை  தான்;
இப்போது 100000 (1லட்சம்) ரூபாய் சம்பளம் வாங்குகிறேன்.
ஆனாலும் அதே பற்றாக்குறை. என்ன நடக்குது இங்கே???

அப்போது தான் எனக்கு ஒன்று தெளிவாக புரிந்தது ,

பற்றாக்குறை சம்பளத்தில் இல்லை.நமது மனதில்தான் திட்டமிடல் இல்லாமை என்கிற பற்றாக்குறை இருக்கிறது என்று.


 
போதுமென்ற  மனம் இல்லாத  பற்றாக்குறை:நான் சென்னை வரும் முன்பு, தூத்துக்குடி பேருந்தில் பயணம் செய்யும் போது, ஒரு சென்னை நண்பரிடம் கேட்டேன்,சென்னையில் விலைவாசி அதிகம் என்று கூறுகிறார்கள், நான் சென்னையில் குடியேற நினைக்கிறேன்..சமாளிக்க முடியுமா என்றுஅவர் சொன்ன பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது.சென்னையில் ரூ1000 வைத்து குடும்பம் நடத்த முடியும்..ரூ100000(1 லட்சம்) வைத்தும் குடும்பம் நடத்த முடியும்.அந்த திட்டமிடல் உன் கையில் தான் இருக்கிறது என்றார். 

அவருடைய வார்த்தைகளை அப்போது கேட்டிருந்தால் இன்று நான் எவ்வளவோ சேமித்திருக்கமுடியும். என்ன செய்வது...சென்னை வந்த பிறகு உற்றார்,நண்பர்கள் எல்லாம் தவறாக நினைப்பார்களோ என்று வாடகை வீட்டையும் அல்லவா அழகு படுத்தினேன்.வீட்டுக்கு வரவங்க நம்மை மதிக்க வேண்டும் என்று தேவை இல்லாவிட்டாலும் ஆடம்பர பொருட்களை  வாங்கி குவித்தேன்.பணம் எல்லாம் இப்படி தேவையற்ற விஷயங்களில் முடங்கி போனது.மருத்துவ அவசரம் என்றாலோ, குழந்தைகளின் கல்விக்கான கட்டணம் கட்டவேண்டி வந்தாலோ திணற வேண்டியிருக்கிறது.இதையே நான் வங்கியில் சேமித்து இருந்தால் அவசர தேவைக்கு தடுமாற்றம் இன்றி சமாளித்திருக்க முடியும். 


" நம் வீட்டு வாசலை மட்டும் பார்க்கவேண்டும் ,
பக்கத்து வீட்டு  வாசலை பார்த்து போட்டியிட்டால்,
                     மேலே சொன்ன பற்றாக்குறை  நம் வாழ்வில் வரும்


எளிமையான வாழ்க்கையில் தான் உண்மையான மனமகிழ்ச்சி இருக்கிறது என்பதை தாமதமாக உணர்வது மனிதனின் குறைபாடு.பணத்தை சேமித்த பின்பு வாங்கி மகிழலாம் என்கிற பிடிவாதம்,கடன் வாங்கியாவது இதை வாங்கியே தீருவேன் என்கிற பிடிவாதத்தை விட சால சிறந்தது.


மனிதன் விசித்திரமானவன்.எப்போதுமே 'அடுத்தவன் நம்மை எப்படி நினைப்பானோ' என்றுதான் யோசிப்பானே தவிர தன் சுய திருப்தியை பற்றியோ அல்லது தன் வருமானத்திற்கு உகந்த வாழ்க்கை பற்றியோ 
சிந்திக்க மாட்டான்.

அங்குதான் பண தடுமாற்றத்தின் முதல் சிக்கல் தொடங்குகிறது. இதை நாம் முதலிலேயே சரி செய்துவிட்டால் நம் வாழ்க்கையில் என்றுமே கொண்டாட்டம்தான் !!!



கருத்து :               மரியா அண்ணா.
எழுத்து வடிவம் : அடியேன் நானே.

(இந்த பதிவை படித்து கல் எறிந்தால் மரியா அண்ணனுக்கு, பூங்கொத்து கிடைத்தால் எனக்கு!!!)

November 28, 2009

விகடனுக்கு நன்றிகள் !!!

 
என்னுடைய ஐம்பதாவது பதிவை (பெருமையுடன் வழங்கும் ஐம்பதாவது இடுகை :) சிறந்த பதிவாக யூத்புல் விகடன் அங்கீகரித்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.











 சிறந்த பதிவாக தேர்ந்தெடுத்த யூத்புல் விகடனுக்கும்,அந்த பதிவிற்கு பின்னூட்டம் இட்டு வாழ்த்தை தெரிவித்த அத்தனை நண்பர்களுக்கும், தமிழிளிஷில் வாக்களித்த நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.








 
 

மூன்று கவிதைகள் !!!


நட்பு
சிநேகிதங்கள்
சிந்திக்கொண்டிருக்கிறது
சிறு சிறு மழைத்துளிகளாய்
நான் முற்றும் துறந்து மணற்பரப்பில்
நெஞ்சுடைந்து கிடைக்கையில்....

காதல்
கண்கள் பார்த்து
காது குளிர வார்த்தைகள்;
கைகள் பிடித்து
கால்நோக நடக்கலாம்;
மனசு முழுக்க
மருதாணி வாசம்;
மழைக்காலம் வரை
நீ என்னில் தீயாய்
இதயம் தீபம் அணையும் வரை
இதே காதலோடு...

வாழ்க்கை
நீ,நான்,நாம்,அவன்,அவள்,அவர்கள்
அனைவரும் முகமூடியில்..
காதல்,காமம்,நட்பு,சிரிப்பு
கண் எட்டும்வரை காற்றாடியில்..
தொலைதூரம்,வெகுநெருக்கம்,பிரிவு,இணைவு
தொலைந்து போகும் மிகவிரைவில்...
பணம்,மனம்,பாசம்,உறவு,துறவு
பறந்து போகும் பத்து வினாடியில்...
ஆனாலும் வாழ்க்கை வாழ்வதற்கே.

November 27, 2009

தமிழன் மாவீரனை போற்றுவோம் !!!



மறைந்த தோழர்கள் புகழ் பாட
மாவீரர் தினம்;
தலைவன் உரைகேட்ட
தமிழ் இனமே தவம் கிடக்கும்;
இன்றோ எம் தலைவன் புகழ் பாட
இந்த தரணியே எழுச்சியாய்;

மக்களின் விடுதலைக்காக
மரணத்தை முத்தமிட்டாய்;
பல்லாண்டுகள் போராடி இன்றோ
புது புரட்சிக்கு வித்திட்டாய்;

மரணம் என்பது உன் உடலுக்கு மட்டுமே
மரணமில்லா உன் கனவுகளும்,லட்சியமும்
வென்று விரைவில் வெற்றி கிட்டுமே;
தாரணி எங்கும் தமிழர் புகழ் எட்டுமே!

இன்னுயிர் ஈந்த தோழர்களே
இனி தமிழர்க்கு விடியல்தான்;
இமைகளை சற்று மூடுங்கள்
இனி ஒரு விதிசெய்வோம் கூறுங்கள்;

November 25, 2009

தூங்காத விழிகள் !!!

தூங்காத விழிகள் !!!

பின்னிரவில் எழுந்து
உறக்கம் கலைந்து
படுக்கையில் புரண்டு
பலமணிநேரம் மறந்து
மனம் யோசித்தது;
எதற்காக பிறந்தோம்?
எதற்காக வளர்ந்தோம்?
எதற்காக காதலித்தோம்?
எதற்காக பிரிந்தோம்?
எதற்காக நட்பானோம்?
எதற்காக பகையானோம்..............

மறுநாள் காலையில்
மிச்சமிருந்தது நேற்றைய
சிகரட் துண்டும், தூங்கா விழிகளின் வலியும் !!!

November 24, 2009

உன் நினைவில் நான் !!!




என்னை காதலிக்கிறேன் என்றாய்
வேண்டாமென மறுத்து விட்டேன்;
இன்றோ நான் உன்னை விரும்புகிறேன்
நீயோ வேறு ஒருவருடன் மணமேடையில் !!! 

விசித்தரமான இந்த வாழ்க்கையில்
வேண்டுதல் நேரத்தில் கிடைப்பதில்லை;
வேண்டாமை வலிய வருகையில்
நூலறுந்த பட்டமாய் அலைபாய்கிறேன் உன் நினைவாய்...

(இந்த கவிதை என் நண்பன் ரமேஷ் ஞானபிரகாசம் என்கிற ரமியின் எண்ணங்களில் உதித்தது..நான் அனுமதியுடன் வெளியிடுகிறேன்)

மாவீரர் தினத்தன்று ஒரு நாள் முழுக்க பதிவர்களின் ஈழ படைப்புக்கள்.

நம் சகோதர செல்வங்கள்-இன்றைய எந்திர உலகிலும் எவ்வித வசதிகளும் இன்றி முகாமில் தனித்து வாழும் நம் அன்பு இன மக்கள்-தமிழ் ஈழ மக்கள் !!!

இவர்களுக்காக போராடிய ஒரு விடுதலை படை இன்று சற்று பின்வாங்கியுள்ள சூழ்நிலையில் 'மாவீரர் தினம்' கொண்டாடப்படுமா அல்லது கொண்டாடாதா என்றெல்லாம் இருக்கிற குழப்பமான இந்த நேரத்தில் தமிழ் இனத்தை சேர்ந்த 

நாம்,தமிழை சுவாசிக்கிற நாம்,தமிழை எழுதிக்கொண்டு இருக்கிற நாம் நம் இன சகோதர்களுக்காக அன்றைய தினத்தில் என்ன செய்ய போகிறோம்?



 

நாம் கையில் துப்பாக்கி ஏந்த வேண்டாம்; அதைவிட கூர்மையான ஆயுதமான நம் பதிவர்களின் எழுத்து இருக்கிறது; 

நாம் அணுகுண்டை போட வேண்டாம்; அதைவிட வலிமை வாய்ந்த நம் பதிவர்களின் ஒற்றுமை இருக்கிறது;


 நாம் எந்த மேடைக்கும் சென்று உரை ஆற்ற வேண்டாம்; நமக்கென இங்கே பல இணையதளங்கள் இருக்கிறது;

இன்னமும் எனக்கு புலிகளின் வரலாறு முழுதாக தெரியாது;ஆனால் தமிழனின் வரலாறு தெரியும்.தமிழனும்,புலிகளும் வெவ்வேறு இல்லை;நம்மூர் அரசியல்வாதிகள் 

(அண்ணன் உண்மைத்தமிழனின் பார்வையில் அரசியல்வியாதிகள்) அங்கே செத்துக்கொண்டே இருக்கும் நம் இனத்திற்காக போராடுகிறார்களா அல்லது நாடகம் ஆடுகிறார்களா என்பது இப்போதைக்கு முக்கியமில்லை.நமக்கு இப்போது அரசியல் பற்றி பேச வேண்டாம்.அதைவிட முக்கியமான வேலை ஒன்று இருக்கிறது;

அது வருகின்ற நவம்பர் 27 ஆம் தேதி நம் இனத்திற்காக போராடிய-உயிர் துறந்த தோழர்களுக்காக நடைபெறும் "மாவீரர் தினம்".அன்று நம் பதிவர்கள் அனைவரும் படைக்கின்ற படைப்புகள் அனைத்தும்(கதை,கவிதை,சிந்தனை,

செய்திகள்,வீடியோ,அனுபவம்,பொது,விமர்சனம்) இப்படி எதுவாக 
இருந்தாலும் அது நம் இலங்கை முகாமில் வாடும் நம் தமிழினத்தை பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது இந்த சிறுவனின் அவா.

அன்று மீண்டும் நம் பதிவர்களின் ஒற்றுமை இந்த உலகிற்கு தெரியட்டும்;நமக்கு அரசியல்வாதிகளை விட சமூக பங்களிப்பு உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவோம்.  மாவீரர் தினம் அன்று நம் இனத்திற்கு நாம் செய்யும் ஒரு சிறு உதவியாய்/நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம் என்பதின் அடையாளமாய் நம்படைப்புகள் இருக்கட்டும்.
   
மாவீரர் தினம் அன்று தமிழினத்தை பற்றி எழுத/பேச நான் அல்லது நாம் விடுதலைபுலிகளாக இருக்கவேண்டும் என்பதில்லை.தமிழனை பற்றி பேச-எழுத-போராட நாம் ஒரு தமிழனாக இருந்தால் மட்டுமே போதும்.நான் தமிழன்.

November 23, 2009

என் மறுபிறப்பின் கதை ..**முற்றும்**

நானும் நடந்ததை சொல்லியபிறகு திரு.ரானா(Assistant consular Officer,Embassy of India,Baghdad,Iraq) கனிவாக என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்பதை தெளிவாக விளக்கிசொன்னார்.


மரியா அண்ணா அவர்கள் வேலை செய்யும் துறை மூலம் ஈராக் நாட்டு பிரஜையான மர்வான்,அலி,அதீர்,ஹுசாம் மற்றும் எங்கள் லீகல் வக்கீல் தாமார் மூலம் பாக்தாத்தில் உள்ள நம் இந்திய தூதரகம் சென்று எனக்கு புது பாஸ்போர்ட் கிடைக்க தேவையான ஆவணங்களை தயார் செய்து கொடுத்துவிட்டு வந்து விட்டார்.

சம்பவம் நடந்த தேதி          :  29-september-2009
ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேதி :  14-October-2009

நேற்று  காலை நேரம் சரியாக பத்து மணிக்கு மரியா தன் துறைக்கு வருமாறு தொலைபேசியில் அழைத்தார்.

உள்ளே நுழைந்தவுடன் ரமேஷ்,மரியா ஓடி வந்து என்னை கட்டிபிடித்து வாழ்த்து சொல்கிறார்கள்.உடன் இருந்த மர்வான்,அலி,அதீர்,ஹுசாம்,தாமார் ஆகியோரும் கைகுலுக்கி தன் சந்தோஷத்தை சொல்கிறார்கள்.பணி காரணமாக பக்கத்துக்கு ஊர் பாஸ்ராவில் இருந்து நண்பர்கள் ராஜ்,சிவா,வினய் தொலைபேசியில் வாழ்த்தை சொல்கிறார்கள்.ஏனெனில் இன்று சரியாக பத்து மணிக்கு மரியா எனது புது பாஸ்போர்ட்டை என்னிடத்தில் ஒப்படைத்தார்.


சரியாக 52 நாட்கள் நான் ஈராக்கில் பாஸ்போர்ட் இல்லாமல் இருந்து இன்று காலை என் புது பாஸ்போர்ட்டை பெற்றேன்.இந்த கடந்த 52 நாட்களும் எனக்கு இரவினில் நிம்மதியான தூக்கம் இல்லை,கண்களை மூடினால் தீயின் இன்னொரு கோரதாண்டவம் தான் தெரிகிறது.எனக்கு சிறிது காலம் ஆகும் இந்த சம்பவத்தை மறக்க.

இந்த சம்பவத்தை மிக சாதாரணமாக ஒரு பத்தியில் சொல்லி முடித்துவிடலாம்.ஆனால் நம்மை சுற்றி எத்தனை நல்ல உள்ளங்கள் இருக்கிறது என்ற உண்மை எனக்கு மட்டுமே தெரிந்து இருக்கும்.அவர்களுக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேன்?பல விதங்களில் எனக்கு உதவிகள் பல புரிந்த இந்த ஈராக் நண்பர்களுக்கு என்ன பெரிதாக செய்து விட போகிறேன்? நம்மை சுற்றியும் நல்ல விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.கவனிப்பதும்,அதை கொண்டாடுவதும் நம் கையில்தான் இருக்கிறது. முடிந்தவரையில் நாமும் மற்றவர்களுக்குதோள் கொடுப்போம்.

இந்த மகிழ்ச்சியான நேரத்தில் எனக்கு பெரும் உதவிகள் புரிந்த இந்த கட்டுரையில் பெயர் குறிப்பிட்டுள்ள அனைவருக்கும்,என் அலுவலக சக தோழர்களுக்கும், பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி திரு.ரானா அவர்களுக்கும், அவருடைய ஊழியர்களுக்கும் என் நெஞ்சம் கனிந்த நன்றியினை தெரிவிப்பதில் பெரும்மகிழ்ச்சி அடைகிறேன்.  

வருகின்ற சனவரி மாதம் முதல் வாரம் சென்னையில் உள்ள என் குடும்பத்தை சந்திக்க போகிறேன் என் புது பாஸ்போர்ட் துணை கொண்டு. புது ஆண்டு நிச்சயம் எனக்கு புது தெம்பையும், புது மலர்ச்சியையும் கொடுக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இந்த கட்டுரையின் நோக்கம்:

வெளிநாட்டில் வாழும் என் அன்பு நண்பர்களே!

1)உங்கள் பாஸ்போர்ட்டை மிக பத்திரமாக வைத்திருங்கள்.

2)உங்கள் பாஸ்போர்ட் நகல்,நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் ஐடி கார்ட்,கல்வி சான்றிதழ்கள்,குடும்ப அட்டை,இந்திய ஓட்டுனர் உரிமம்,வாக்காளர்  அட்டை, விசா இவற்றின் நகல்களை எப்போதும் உங்கள் கையில் வைத்திருங்கள் அல்லது உங்கள் மெயில் ஐடிக்கு ஸ்கான் செய்து வையுங்கள்.

3)அப்படியும் ஏதேனும் பாஸ்போர்ட்டை தொலைக்க நேர்ந்தால் பதட்டபடாமல் உங்கள் நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தை உடனடியாக தொடர்பு கொண்டு உங்கள்
நிலையை விளக்கி தேவையான ஆவணங்களை சமர்ப்பியுங்கள்.

4)பல நாடுகளில் உள்ள நம் தூதரகங்கள் தற்காலிக சான்றிதழ் கூட வழங்கும்.இது நாட்டுக்கு நாடு மாறுபடும்.

5)உங்கள் பாஸ்போர்ட் தொலைந்து போனால் உடனடியாக பக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து ஒரு முதல் தவகல் அறிக்கை(FIR) வாங்கி,தேவையான ஆவணங்களுடன் இந்தியதூதரகத்தில் தர வேண்டும்.

6)  உங்கள் பாஸ்போர்ட் எரிந்து போனால் உடனடியாக பக்கத்தில் உள்ள 'தீ அணைப்பு துறையில்' இருந்து ஒரு அறிக்கையும், காவல் நிலையத்தில் இருந்து ஒரு 'முதல் தவகல் அறிக்கை(FIR)' வாங்கி,தேவையான ஆவணங்களுடன் இந்திய தூதரகத்தில் தர வேண்டும்.

7) இதைவிட செய்ய வேண்டிய மிக முக்கிய வேலை என்னவென்றால் உங்களை தொலைத்தாலும் உங்கள் பாஸ்போர்ட்டை மட்டும் தொலைக்காதீர்கள் :)


********************************கட்டுரை முற்றும்*****************************

November 22, 2009

என் மறுபிறப்பின் கதை ..பாகம் - 3

பாகம் -3


என் பாஸ்போர்ட்டை எங்கே என்று எல்லோரிடமும் கேட்டாயிற்று.

பதிலாக என் பாஸ்போர்ட்டின் எறிந்த பக்கங்கள் மட்டும் என் கையில் யாரோ திணித்தார்கள்.அதை பார்த்த அடுத்த வினாடி உடைந்து அழுதேன்.வெளிநாட்டில் வாழும் நமக்கு உயிருக்கு அடுத்தபடி பாதுகாக்கவேண்டிய விஷயம் இந்த பாஸ்போர்ட்.அது இல்லையென்றால் நாம் எப்படி இந்தியாவிற்கு செல்ல முடியும்?

ரமேஷ்,மரியா மற்றும் வினய் எல்லோரும் என்னை தேற்றினார்கள்..விடு மாப்ள.பாஸ்போர்ட்,எரிந்து போன மத்த பொருட்கள் வேற வாங்கிக்கலாம்.நீ உயிர் பிழைச்சதே பெரிய விஷயம்.கடவுள் தான் உன்னை காப்பாத்தி இருக்கார் என்றெல்லாம் சொன்னாலும் மனம் மட்டும் அதையே நினைத்து வருத்தத்தில் ஆழ்ந்தது.

சிறிது நேரம் கழித்து முகாம் மேலாளர் எனக்கு வேறு ஒரு புதிய அறையை ஒதுக்கி இருப்பதாகவும்,நாளை அடிப்படை தேவைகளுக்கு சோப்பு,டவல்,பிரஷ் வேண்டிய பொருட்களை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். மற்ற அனைவரும் எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்கள்.

எனக்கு மறுபடியும் தனியாக படுக்க விருப்பம் இல்லை, என் நண்பர்களும் அதை விரும்பவில்லை. மூன்று பேரும் தங்கள் அறைகளுக்கு வருமாறு அன்பு கட்டளை இட்டாலும்...என் கண்கள் மட்டும் எரிந்து போன என் அறையை ஒரு முறை பார்த்தது.

சிறிது நேரம் மன குழப்பத்திற்கு பின், வினய் ரூமுக்கு சென்றோம்.எனக்காக மரியா அண்ணா அந்த நேரத்திலும் பிரார்த்தனை செய்தபோது மனசு நெகிழ்ந்தது.


இரவு 2 மணிவரை எனக்கு ஆறுதலாக பேசிவிட்டு ரமேஷ்,மரியா இருவரும் படுக்க சென்றார்கள். என் வேண்டுகோளின்படி வினய்யும் தூங்கிவிட்டான்.எனக்கு கண்கள் மூடினால் நெருப்பு கோரசிரிப்புகாட்டுகிறது. 

விடிந்தபின் எல்லோரும் அலுவலகம் செல்ல தயார் ஆனார்கள், நானும் தயார் ஆனேன்.நண்பர்கள் என்னை ஓய்வு எடுக்க சொல்லி வற்புறுத்தியும் எனக்கு முகாமில் இருக்க பிடிக்காமல் நண்பர்கள் கொடுத்த சட்டை,பேன்ட்,ஷு போட்டுக்கொண்டு அலுவலகம் வந்த சிறிது நேரத்தில்,குவைத்தில் இருந்து என் அன்பு அண்ணன்,எங்கள் கணினிதுறை மேலாளர் அப்துல் ரஷீத்தும்,அண்ணியும் எனக்கு தொலைபேசியில் ஆறுதல் சொன்னார்கள்.
என்னுடன் பணிபுரிபவர்கள் புதிய பொருட்கள் வாங்க தேவையான பணத்தை அவர்களே ஒவ்வொரு துறைவாரியாக சென்று மொத்தமாய் என் கையில் தருகையில் நான் மறுத்தேன்.மிகபெரிய போராட்டத்திற்கு பின் வாங்கியே ஆகவேண்டிய கட்டாயத்தில் வாங்கினேன்.அன்றே ஒரு நண்பர் உடன் வந்து கடைக்கு சென்று புதியதாய் தேவையான பொருட்களை வாங்கவும்உதவி செய்தார். 
















 
அலுவலகம் முடிந்து சாயங்காலம் முகாம் சென்று என் எரிந்து போன அறையையும்,பொருட்களையும் பார்த்தேன்..எரிந்து போனவை அனைத்தும் எனக்கு கனவுகளாய் தோன்றியது.

மறுநாள் காலை மரியா அண்ணா அவர்கள் பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி திரு.ராணாவுக்கு என்னை பேச செய்தார்.

November 21, 2009

என் மறுபிறப்பின் கதை ..



பாகம் - 2

தூங்கிக்கொண்டே இருந்த வேளையில் கண்ணுக்கு நேராக கடும் அனலை உணர்ந்தேன்.

சட்டென முழிப்பு தட்டி படுக்கையில் இருந்து எழுந்து பார்க்கையில் என்னை சுற்றி ஒரே தீயாய் எரிந்து கொண்டிருக்கிறது.ஒரு நிமிடம் இது கனவா இல்ல நிஜமா என்றே புரியவில்லை எனக்கு.அந்த அனலில் உடம்பு தகிக்கிறது.

நிஜம் என்று புரிந்த அடுத்த வினாடி தீ இல்லாத இடம் எது என்று கண்கள் தேடியது உயிரை காப்பாற்றி கொள்ள. கதவு வழி பக்கம் மட்டும் ஒரு ஆள் போகும் அளவு தீ சற்று இல்லாமல் இருப்பது போல் தோன்றவே கொஞ்சமும் தாமதிக்காமல் வெளியே ஓடினேன்.

வெளியில் ஓடி வந்த அடுத்த நிமிடம் 'தீ அணைப்பு தெளிப்பானை(Fire Extingusher)' தேடினேன். அடடா..அது தீயினில் அல்லவா உடன் சேர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது! தண்ணீரும் கைகிட்டும் தூரத்தில் எதுவும் தட்டுபடவில்லை.
கொஞ்சம் தாமதித்தாலும் தீ வேகமாக மற்ற இடங்களுக்கு பரவக்கூடிய அபாயம் இருந்தபடியால் நேராக பாதுகாப்பு அலுவலகம் நோக்கி ஓடினேன்.

பணியில் இருந்த பாதுகாவலருக்கு நான் விளக்க வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை, ஏனெனில் தீ விண்ணை நோக்கி எரிந்து கொண்டு இருப்பதை அவரும் கவனித்து விட்டார்.உடனே ரேடியோவில் (நம்மூர் டிராபிக் போலீஸ் வைத்து இருப்பார்களே)
'அவசர தகவல்' என்று சொல்லிபடியே முகாமில் உள்ள அபாய சங்கை அழுத்தினார்.

அடுத்த சில நிமிடங்களில் முகாமில் உறங்கிக்கொண்டு இருந்த அனைவரும் வெளியே ஓடி வந்தனர். என் அறைக்கு வந்தவர்கள் அனைவரும் தீயின் உக்கிரத்தை பார்த்து பயந்தாலும் சுதாரித்து கொண்டு அணைக்கவேண்டிய முயற்சிகளில் இறங்கினார்கள்.

எல்லோரும் அங்கும் இங்கும் ஓடுகிறார்கள். தண்ணீர் ஊற்றப்பட்டது,தீ அணைப்பு கருவிகள் மூலம் சிலர் முயன்று கொண்டிருக்கிறார்கள்.இருபது நிமிடங்கள் கழித்து தீ அணைப்பு வண்டிகள் வந்தன.அவற்றின் மூலம் தான் தீயை சற்று சமாதனப்படுத்த முடிந்தது.

என் அறை மொத்தமாக எரிந்து முடிகையில் சரியாக மணி 11.30 காட்டியது. இந்த தீயை அணைக்கும் களேபரத்தில் எல்லோரும் என்னை மறந்து போயிருந்தனர்.


செப்டம்பர் மாதம் என்பதால் இரவின் குளிரும்,கண்ணீரின் கதகதப்பும் என்னை ஏதோ ஒரு நிலைக்கு தள்ளியிருந்தது.

பாதுகாப்பு அலுவலகம் நோக்கி கண்,மண் தெரியாமல் வேகமாக ஓடுகையில் கால்தடுக்கி விழுந்ததில் இடது காலின் சுண்டுவிரல் நகம் முழுதுமாய் நசுங்கி இருந்தது,
அடிப்பாதத்தில் சிறிது சதையும் கிழிந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.அந்த வலியாலும்,சட்டை போடமால் இருந்ததினால் குளிராலும்,உயிர் பிழைத்த அதிர்ச்சியாலும் என் உடம்பு நடுங்கி கொண்டிருந்தது.ஒரு ஓரம் நடக்க முடியாமல் உட்கார்ந்திருந்தேன்.

எல்லாம் முடிந்து இருக்கையில், 'பூங்குன்றன் எங்கே?' என்று என் நண்பர்கள் ரமேஷ்,வினய்,மரியா அண்ணா மற்றும் உடன் பணிபுரிவோர் என்னை தேடி அங்கே,இங்கே அலைந்து கொண்டிருந்ததை பார்த்தாலும் என்னால் குரல் எழுப்ப முடியாத அதிர்ச்சி என்னை ஆட்கொண்டிருந்தது.

ரமேஷ் என்னை பார்த்துவிட்டு அருகில் ஓடி வந்தான்.'மச்சான் என்ன ஆச்சு? உனக்கு ஒண்ணுமில்லையே?'.அதற்குள் மரியாவும்,வினய்யும்,மற்றவர்களும் என்னை நோக்கி ஓடிவருகின்றனர்.


'வாட் தி ஹெல் இஸ் கோயிங் இயர்', 'பூங்குன்றன் இஸ் அலைவ்', 'ஆர் யு ஆல்ரைட்', 'வாட் ஆபன்ட்' இப்படி அவரவர் பேசிக்கொண்டும்,என்னை கேள்வி கேட்டுக்கொண்டும் இருக்கிறார்கள்.

ரமேஷ் : மச்சான் எப்படி ஆச்சு? உனக்கு எதுவும் அடிபடலியே?
நான்: இல்லடா.எனக்கு எதுவும் இல்ல.நான் நல்லா தான் இருக்கேன்.
ரமேஷ்/மரயா/வினய் : தீ எப்படி வந்தது?
நான்: தெரியலடா.தூங்கிட்டு இருந்தேன்.என்னவோ சூடா இருக்குன்னு கண்ணை திறந்து பார்த்தா என்னை சுத்தி தீ .
ரமேஷ்: சரி..சரி..விடு.வா.என் ரூமுக்கு வந்து முதல்ல தண்ணி குடி,ரெஸ்ட் எடு.
நான்: எல்லாம் தீயில கருகி போச்சுடா.ஆமா..என்னோட பாஸ்போர்ட் எங்கே?

November 20, 2009

என் மறுபிறப்பின் கதை ..

பாகம் - 1



செப்டம்பர் மாதம் 2009 ஆம் ஆண்டு 29 ஆம் நாள் இரவை என்னால் சாகும்வரை மறக்க முடியாது.

நான் தற்போது இருப்பது ஈராக் தலைநகரம் பாக்தாத்தில்.இங்கு உள்ள ஒரு அமெரிக்க விமான தனியார் நிறுவனத்தில் கடந்த 2008 சனவரி மாதம் முதல் வேலை செய்து வருகிறேன்..கிட்டதட்ட இரண்டு வருடம் ஆகப்போகிறது.

நல்ல நிறுவனம்.நல்ல தலைமையின் கீழ் நிறுவனம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.என்னுடன் பணிபுரியும் நம் தமிழ் நண்பர்கள் மட்டும் பத்து பேர் இருக்கிறார்கள்.அண்ணன்கள் அப்துல் ரஷீத்,மரியா ஆண்டனி,நண்பர்கள் ரமேஷ்,சிவா,ராஜ்,வினய்,ராக்ஸி செல்வன்......

மற்ற உடன் பணிபுரிபவர்கள் எல்லோருமே அமெரிக்கா,இங்கிலாந்து,தென் ஆப்ரிக்கா,பிஜி,பாகிஸ்தான்,ஸ்ரீலங்கா,பிலிப்பைன்ஸ்,ரஷ்யா,சீனா போன்ற நாடுகளில் இருந்து வந்து என்னுடன் வேலை பார்ப்பவர்கள். இதை தவிர நூறு ஈராக் நாட்டினரும் உடன் பணிபுரிகிறார்கள்.


நானும்,இவர்கள் அனைவரும் தங்க ஒரு அருமையான இடம் உண்டு.அதை முகாம்(CAMP) என்போம்.செங்கல்,சுண்ணாம்பு இவற்றால் கட்டப்படாத ஆனால் உறுதியான ஸ்டீல் கொண்டு செய்யப்பட்ட ட்ரைலரில்(TRAILERS) தங்குவோம். ட்ரைலர் என்றால் சாதாரணமாக நினைக்க வேண்டாம்.அதன் உள்ளே எல்லா வசதியும் இருக்கும்.அதாவது நம்ம கேரவன் வேனில் இருப்பது போன்று.இது மட்டும் இன்றி எங்கள் முகாம் உள்ளேயே உணவு விடுதி,பார்,ஜிம் போன்ற வசதிகளும் உண்டு.

அலுவலகத்திலும்,முகாமிலும் நவீன ரக துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு இருக்கும் எந்நேரமும்.உள்ளூர் எதிரிகளிடம் இருந்து எங்களை பாதுகாக்கவே இப்படி பந்தோபஸ்து.

இதில் உங்கள் மறுபிறப்பு எங்கே வந்தது என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

சொல்கிறேன்..மேற்சொன்ன செப்டம்பர் 29,2009 அன்று வழக்கம் போல பணிமுடித்து விட்டு எல்லோரும் முகாமுக்கு சென்றோம்.தினமும் முகாமில் என் நண்பன் ரமேஷ் அறையில் நான்,மரியா அண்ணா,வினய் எல்லோரும் இரவு உணவு சாப்பிடும்வரை பேசிவிட்டு பின்பு தத்தம் அறைகளுக்கு செல்வது வழக்கம்.அன்றும் இரவு பேசி இருந்துவிட்டு என் அறைக்கு வந்து ஸ்கைப்பில்(SKYPE) என் மனைவியுடன் பேசிவிட்டு படுக்கைக்கு செல்லும்போது நேரம் 9.15 மணி.

அடுத்து ஒரு மணி நேரத்தில் நிகழ போகும் பெரும் ஆபத்தை உணராமல் தூங்கிவிட்டேன்.

November 18, 2009

உயிர் பூவே !!!

உயிர் பூவே !!!

நீ வரும்வழியில்
பூக்கள் தூவ மாட்டேன்.
அந்த பூக்களின் மரணத்தில்
உன் உயிர்ப்பூ வருந்துமே !!!



காதல் மோசடி  !!!

காதலை சொன்னேன்
ஏற்று கொண்டாய்;
முத்தம் கேட்டேன்
மறுக்காமல் இதழில் பதித்தாய்;
கட்டிப்பிடி என்றேன்
இறுக அணைத்தாய்;
நான் கேட்ட அனைத்தும் செய்தாய்
ஆனால் என்னை கேட்காமலேயே
வேறு ஒருவனை மணந்து
வாழ்த்து கேட்கிறாயே?
தரவா? மறவா?

November 17, 2009

பெருமையுடன் வழங்கும் ஐம்பதாவது இடுகை :)

பெருமையுடன் வழங்கும் ஐம்பதாவது இடுகை-  நன்றி நன்றி நன்றி !!!


(எத்தனையோ பேர் நூறு, ஐநூறு என்று பதிவுகள் எழுதி அமைதியாக இருக்கும்போது 'நேற்று மழையில் இன்று முளைத்த காளானாய்' ஐம்பதுக்கே பெருமையா என்று நீங்கள் கேட்பது புரியுது சாமி-ஆனால் எனக்கெல்லாம் இந்த ஐம்பதாவது இடுகையே பெரிய சாமாசாரம்ங்க)

நான் அப்படி என்னதான் எழுதி விட்டேன்? இல்லை இன்னும் அப்படி புதிதாய் என்ன எழுத போறேன்னு பார்த்தா எழுதியவரைக்கும் நிச்சயம் ஒன்றுமில்லை. ஆனால் என் எழுத்துக்கள் நிச்சயம் ஒருநாள் என் தமிழ் மக்களை கவரும் என்பதில் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.

நாம் கடுமையாக உழைப்பின் எந்த கனவும் ஒருநாள் நனவாகும்.என் கனவும் நனவாக உழைத்து கொண்டிருக்கிறேன்.

சரளமாய் பெய்யும் மழையில்,மின்சாரம் இல்லாத ஓர் இரவில்...சட்டென எங்கோ தோன்றும் வெளிச்சம் போல என் கவிதைகள் இருக்கவேண்டும் என்பதே என் ஆசை.

என் கவிதைகள் மகாகவிகள் பாரதி/பாரதிதாசன் கவிதைகள் போல சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றெல்லாம் நினைக்கவில்லை.ஆனால் இன்றைய வேகமான எந்திர சூழலில் ஒரு நிமிடம் என் கவிதைகளை படித்து சிறு மகிழ்ச்சி கிடைத்தால் அதுவே எனக்கு சிறப்பு.

தமிழ் ஒரு அழகான மொழி. தமிழில் நான் எழுதுகிறேன் என்பதே எனக்கு கிடைத்த பேரின்பம்.தமிழனாய் பிறந்ததே ஒரு தவம்.என்னால் முடிந்ததை நானும் எழுதுகிறேன் என்ற அளவில் மிக்க பெருமை எனக்கு.

முகம் தெரியாத பல நல்ல உள்ளங்கள் என் ஒவ்வொரு படைப்பிற்கும் தொடர்ந்து கருத்துகள்,ஆலோசனைகள்,அறிவுரைகள் வழங்கி வருவதை நினைக்கையில் உள்ளம் நெகிழ்கிறது.அவர்களுக்கும்,என் உடன் பணிபுரியும் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியினை தெரிவிப்பதில் பெருமை அடைகிறேன்.

நன்றியுடன்,

பூங்குன்றன்.

November 15, 2009


காதல் வழி யாது?

சன்னமாய் கதவு வழி வந்த காதல்
சலிக்கும்வரை விளையாடியது என்னிடம்.
வேண்டாம் என்று ஒதுக்காமல்
வேண்டுமென்றே சேர்ந்தே நானும் விளையாடினேன்;

சித்தாந்தம்,வேதாந்தம்,கடவுள்,மதம்
சிறிதளவும் வேறுபாடு காட்டாமல்
சிரிக்க சிரிக்க மனம்
சிறைப்பட்டு கிடந்தது அதன் காதலில்;

வாழ்க்கை சூழலில் வேகமாய் போகையில்
வர்ண வானவில்போல காதலும்;
ஒருநிமிடம் நின்று ரசித்தபின்பு
ஓராயிரம் கடமைகள் மனக்கண்ணில்...

வானவில் மறைந்தாலும்
வர்ணம் மட்டும் இதயத்தில் வாசமாய்;
காதல் சுகம்தான் என்றாலும்
சுமையாய் சுருங்கிப்போனது கானல்நீராய்;

இப்போது கதவு வழி வந்த காதல்
விடைசொல்லி வேர் அறுத்து
வேதனையில் உருக வைத்தபடி
சாளரம் வழியில் போகிறது வேறு பாதை நோக்கி !!!

November 13, 2009

பித்தனா? காதல் சித்தனா?









வளைகரங்களால் நீ வாசலில் தானே கோலமிடுகிறாய்
ஏன் என் மனதும் வளைந்து வளைந்து வர்ணமாகிறது ?

அலைகடலில் நீ உன் கால்களை தானே நனைக்கிறாய்
அதற்கேன் என் மனது கிடந்து அலைபாய்கிறது ?

தொலைதூர ஊருக்கு நீ விடுமுறையில் தானே செல்கிறாய்
இதயம் ஏன் பொம்மையை தொலைத்த குழந்தையாகிறது ?

சிலைபோல தானே அழகாக இருக்கிறாய்
ஆனால் உன்னை மீண்டும் உதட்டால் செதுக்கிட ஏன் தோன்றுகிறது?

நடமாடும் தேர்போல தானே இருக்கிறாய்
மனமோ நிலை இன்றி உன்னை தேடி தேடி அலைகிறது ?

விடை தேடி அலையும்போது தெரு பித்தன் சொன்னான்.
முட்டாளே இதற்கு பெயர்தான் காதல் என்று.

மிக்க நன்றி பித்தனே.நீயேன் இப்படி ஆனாய் என்றேன்.
"உனக்கு நான் மூத்தவன்.நீயும் என் வழியில் தொடர்கிறாய் என்றான்."

November 12, 2009

காதல் சிறை

காதல் சிறை !!!

நீ என் கண்களை பார்த்து
பேசுகையில்
காலடியில் உலகம் நழுவுகிறது;

நீ என் கைகளை பற்றி
கதை பேசுகையில்
என் மனத்தோட்ட மலர்கள் எல்லாம் பூக்கிறது;

உன் கொலுசு சப்தம்
கேட்கையில்
இதயம் நூறுமுறை படபடக்கிறது;

இப்படியாய் என் காதல்
தினம் தினம்
வளர்பிறையாய் வளர்கிறது - ஆகவே

தேவதை வந்து வரம் கேட்டால்
வேணாம் என்பேன்.
நீயே எனக்கு தேவதையாக இருப்பதால்...

கண்களால் உன்னை சிறையிலிட்டு
என் மனதிற்குள்
முத்த சங்கிலியால் கட்டி,

வேண்டுமென்றே விடுதலை செய்து
லஞ்சமாய்
மொத்தமாய் உன்னை பெறுவேன் !!!

November 11, 2009

சூழ்நிலை புகைப்படம்

சூழ்நிலை புகைப்படம் (Situation Photo என்பதன் தமிழ் ஆக்கம்-சரியா?)

இதை பற்றி எழுத ஒன்றும் இல்லை.
நம்ம சிங்கார சென்னையில் உள்ள ஒரு தெருதான் இது.கங்கை மாதிரி இருக்கா?


ரியல் ஹீரோ 2009


ரியல் ஹீரோ 2009

வறுமையில் வாடும் சமுதாயத்தை சேர்ந்த திறமையான மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை முன்னேற்றமடைய வைக்கும் திட்டத்தின் பெயர் தான் "சூப்பர் -30'. இந்த திட்டத்தை உருவாக்கியவர், கணித வல்லுனர் ஆனந்த் குமார்.


பீகாரை சேர்ந்த இவர், தன் சூப்பர்-30 திட்டத்தின் மூலம் கடந்த ஏழு ஆண்டுகளில், துப்புரவு தொழிலாளி, ரிக்ஷா ஓட்டுபவர், நிலமற்ற தொழிலாளி உட்பட பலரின் பிள்ளைகளை, இந்தியாவின் முதன் மையான கல்வி மையங்களில் படிக்க வைத்து, சிறந்த தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களாக உருவாக்கி வருகிறார்.ஒவ்வொரு ஆண்டும் திறமை வாய்ந்த 30 மாணவர்களை தேர்ந் தெடுத்து பயிற்சி கொடுப்பதாலேயே இந்த திட்டத்திற்கு சூப்பர் -30 என பெயரிடப்பட்டுள்ளது. இவர், இத்திட்டத்தை துவங்கிய போது, 30 மாணவர்களின் தேவை யை பூர்த்தி செய்வது என்பது சிறிது கடினமானதாக இருந்தது. ஆனால், அவரது குடும்பத்தினர் ஆதரவு கரம் நீட்டினர். ஆனந்த் குமார், மற்ற பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பது போன்ற வேலைகளை செய்து பணம் ஈட்டினார். அவரின் தாயார் ஜெயந்தி தேவி, மாணவர்களுக்கான உணவுகளை தயார் செய்து கொடுத்தார்.


"சூப்பர்-30' திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரே இலக்கு கடுமையாக படிக்க வேண் டும் என்பதே . மாணவர்களுக்கு கடும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் பலன் முதலாம் ஆண்டே கிடைத்தது. தன் குழுவில் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆசிரியர்களுடன் இணைந்து, ஆனந்த் கடுமையாக உழைத்தார். கடந்த ஏழு ஆண்டுகளில், இவரிடம் பயிற்சி பெற்ற 182 மாணவர்கள், நாட்டின் பல்வேறு ஐ.ஐ.டி., மையங்களில் இடம் பெற் றுள்ளனர். கடந்த 2003ம் ஆண்டு "சூப்பர்-30' திட்டம் துவங்கப் பட்டது. அப்போது 30 மாணவர்களில், 18 பேர் ஐ.ஐ.டி.,களில் படிக்க தேர்ந்தெடுக்கப்பட்டனர். அடுத் தாண்டு 22 பேரும், 2005ம் ஆண்டு, 26 பேரும், கடந்த 2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில், தலா 28 பேர் தேர்ச்சி பெற்றனர்.


கடந் தாண்டு மற்றும் இந்தாண்டும் "சூப்பர்-30' மூலம் பயற்சி பெற்ற 30 மாணவர்களும், தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, ஆனந்த் குமார் கூறுகையில், "அடுத்தாண்டு முதல், இந்த திட்டத்தில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 60 ஆக அதிகரிக்க உள்ளேன். அப்போது, தான் பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் வாய்ப்பு பெறுவர்' என்றார்.ஆனந்த் குமார் மாணவ பருவத்தில் மிகவும் கஷ்டப்பட்டவர். தபால் துறை ஊழியராக இருந்த அவரது தந்தை இறந்த பின், ஆனந்த் குமாருக்கு, கருணை அடிப் படையில், கிளார்க் வேலை வழங்கப்பட்டது.


ஆனால், ஆனந்த் குமார் அதை ஏற்க மறுத்து, தன் படிப்பை தொடர்ந்தார். அப்போது பல தடைகளை எதிர்கொண்டார்.அவரது தாய் அப்பளங்கள் மற்றும் பிற உணவுப் பொருட் களை தயாரித்து ஆனந்த் பெயரில் விற்றார். ஆனந்த் குமாரும் அந்த பொருட்களை, வீடு வீடாக சென்று விற்று வருவார். அப்போது அவர் அனுபவித்த துன்பங்கள் தான், அவரை போன்ற மற்றவர்களின் துன்பத்தை உணர வைத்தன. அது தான் "ராமானுஜம் கணக்கு பள்ளி' மற்றும் "சூப்பர் -30' ஆகியவை துவங்க வழி வகுத்தன. இவை இரண்டும் பிரபலமடைய துவங்கிய போது, இவற்றை நிறுத்த கோரி, பல்வேறு தரப்பினரின் மிரட் டல்களை சந்திக்க வேண்டிய சூழல் ஆனந்திற்கு ஏற்பட்டது. கடந்த 2004ம் ஆண்டு, ஆனந்த் கொலை தாக்குதலில் இருந்து தப்பி உள்ளார். இவரது பயிற்சி மையத்தையும், சிலர் தாக்கினர். ஆனால், இதற்கெல்லாம் அஞ்சாமல், ஆனந்த் தன் குறிக்கோளை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.

நன்றி: தினமலர்
தேதி: 10-Nov-2009

November 10, 2009

உங்களுக்கு இன்னிக்கு விடுமுறை..ரெஸ்ட் எடுங்க !!!


இப்போதைக்கு ரெஸ்ட் எடுத்துக்க.எழுதி எழுதி ரொம்ப களைச்சு போய்ட்ட.
 

(ஹலோ..நான் என்னை சொன்னேங்க.ஹி ஹி ஹி)

அதனால ஒரு அழகான தமிழ் பாடல் வரிகளும், அதற்கான ஒலி/ஒளி இணைப்பும் இங்கே..


http://www.youtube.com/watch?v=22tZ-4GSzEI&feature=related


அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்

கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
அன்பில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

நீ நீ ஒரு நதி அலை ஆனாய்
நான் நான் அதில் விழும் நிலை ஆனேன்

உந்தன் மடியினில் மிதந்திடுவெனோ
உந்தன் கரை தொட பிளைத்திடுவெனோ

அலையினலே பிறக்கும் நதி கடலினிலே கலக்கும்
மனதிலே இருப்பதெல்லாம் முனதிலே கலக்கும்

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்

கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
அன்பில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவனே
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன்

எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைத்தோம் எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க...

கனவே கனவே கண் உறங்காமல்....

கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
அன்பில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

 ------------------------------------------------------------------

காதல் போர்க்களம்

காதல் போர்க்களம் ...


இரவு பூக்களாய் உன்
கனவுகள்
சுகந்த மலராக மலர்கிறது;

நிலவின் ஒளியாய் உன்
நினைவுகள்
சூர்ய வெளிச்சமாய் மிளிர்கிறது;

அம்பென பாயும் உன்
பார்வையோ
பூவிதழாய் இனிக்கிறது;

வாழ்வியல் இலக்கணமின்றி நம்
உடல்கள்
காமனின் போர்க்களத்தில் குதிக்கிறது;

எல்லாம் முடிந்து எழுகையில்
ஏனோ இதயம் 
பெருங்குரலெடுத்து அழுகிறது  !!!

November 9, 2009

இறுதி கவிதை!!!


சமர்ப்பணம் 

சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த
உன் நினைவுகளை மொத்தமாய்
காகிதமாய் செய்து கப்பல் இட முயல்கிறேன்;

வண்ண வண்ண பூக்கள் போல்
பூத்திருந்த நம் ஞாபகங்கள்
காய்ந்த சிறகுகளாய் உதிர்வதை உணர்கிறேன்;

காதலிக்கும் காலங்களில் நீ பேசிய
வார்த்தைகள் ஒவ்வொன்றும்
தேன் ஆறாய்;
நீ மறந்து சென்ற பின் யாவும் எனக்கு
கானல் நீராய்;

சேகரித்த உன் சிரிப்புகளை
செலவு செய்ய மனமில்லை;
உன்னை காதலித்த பாவத்திற்காக
இறுதி கவிதையை சமர்ப்பிக்கிறேன்;