நானும் நடந்ததை சொல்லியபிறகு திரு.ரானா(Assistant consular Officer,Embassy of India,Baghdad,Iraq) கனிவாக என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்பதை தெளிவாக விளக்கிசொன்னார்.

மரியா அண்ணா அவர்கள் வேலை செய்யும் துறை மூலம் ஈராக் நாட்டு பிரஜையான மர்வான்,அலி,அதீர்,ஹுசாம் மற்றும் எங்கள் லீகல் வக்கீல் தாமார் மூலம் பாக்தாத்தில் உள்ள நம் இந்திய தூதரகம் சென்று எனக்கு புது பாஸ்போர்ட் கிடைக்க தேவையான ஆவணங்களை தயார் செய்து கொடுத்துவிட்டு வந்து விட்டார்.
சம்பவம் நடந்த தேதி :
29-september-2009
ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேதி :
14-October-2009
நேற்று காலை நேரம் சரியாக பத்து மணிக்கு மரியா தன் துறைக்கு வருமாறு தொலைபேசியில் அழைத்தார்.
உள்ளே நுழைந்தவுடன் ரமேஷ்,மரியா ஓடி வந்து என்னை கட்டிபிடித்து வாழ்த்து சொல்கிறார்கள்.உடன் இருந்த மர்வான்,அலி,அதீர்,ஹுசாம்,தாமார் ஆகியோரும் கைகுலுக்கி தன் சந்தோஷத்தை சொல்கிறார்கள்.பணி காரணமாக பக்கத்துக்கு ஊர் பாஸ்ராவில் இருந்து நண்பர்கள் ராஜ்,சிவா,வினய் தொலைபேசியில் வாழ்த்தை சொல்கிறார்கள்.ஏனெனில்
இன்று சரியாக பத்து மணிக்கு மரியா எனது புது பாஸ்போர்ட்டை என்னிடத்தில் ஒப்படைத்தார்.
சரியாக 52 நாட்கள் நான் ஈராக்கில் பாஸ்போர்ட் இல்லாமல் இருந்து இன்று காலை என் புது பாஸ்போர்ட்டை பெற்றேன்.இந்த கடந்த 52 நாட்களும் எனக்கு இரவினில் நிம்மதியான தூக்கம் இல்லை,கண்களை மூடினால் தீயின் இன்னொரு கோரதாண்டவம் தான் தெரிகிறது.எனக்கு சிறிது காலம் ஆகும் இந்த சம்பவத்தை மறக்க.
இந்த சம்பவத்தை மிக சாதாரணமாக ஒரு பத்தியில் சொல்லி முடித்துவிடலாம்.ஆனால் நம்மை சுற்றி எத்தனை நல்ல உள்ளங்கள் இருக்கிறது என்ற உண்மை எனக்கு மட்டுமே தெரிந்து இருக்கும்.அவர்களுக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேன்?பல விதங்களில் எனக்கு உதவிகள் பல புரிந்த இந்த ஈராக் நண்பர்களுக்கு என்ன பெரிதாக செய்து விட போகிறேன்? நம்மை சுற்றியும் நல்ல விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.கவனிப்பதும்,அதை கொண்டாடுவதும் நம் கையில்தான் இருக்கிறது. முடிந்தவரையில் நாமும் மற்றவர்களுக்குதோள் கொடுப்போம்.
இந்த மகிழ்ச்சியான நேரத்தில் எனக்கு பெரும் உதவிகள் புரிந்த இந்த கட்டுரையில் பெயர் குறிப்பிட்டுள்ள அனைவருக்கும்,என் அலுவலக சக தோழர்களுக்கும், பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி திரு.ரானா அவர்களுக்கும், அவருடைய ஊழியர்களுக்கும் என் நெஞ்சம் கனிந்த நன்றியினை தெரிவிப்பதில் பெரும்மகிழ்ச்சி அடைகிறேன்.
வருகின்ற சனவரி மாதம் முதல் வாரம் சென்னையில் உள்ள என் குடும்பத்தை சந்திக்க போகிறேன் என் புது பாஸ்போர்ட் துணை கொண்டு. புது ஆண்டு நிச்சயம் எனக்கு புது தெம்பையும், புது மலர்ச்சியையும் கொடுக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இந்த கட்டுரையின் நோக்கம்:
வெளிநாட்டில் வாழும் என் அன்பு நண்பர்களே!
1)உங்கள் பாஸ்போர்ட்டை மிக பத்திரமாக வைத்திருங்கள்.
2)உங்கள் பாஸ்போர்ட் நகல்,நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் ஐடி கார்ட்,கல்வி சான்றிதழ்கள்,குடும்ப அட்டை,இந்திய ஓட்டுனர் உரிமம்,வாக்காளர் அட்டை, விசா இவற்றின் நகல்களை எப்போதும் உங்கள் கையில் வைத்திருங்கள் அல்லது உங்கள் மெயில் ஐடிக்கு ஸ்கான் செய்து வையுங்கள்.
3)அப்படியும் ஏதேனும் பாஸ்போர்ட்டை தொலைக்க நேர்ந்தால் பதட்டபடாமல் உங்கள் நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தை உடனடியாக தொடர்பு கொண்டு உங்கள்
நிலையை விளக்கி தேவையான ஆவணங்களை சமர்ப்பியுங்கள்.
4)பல நாடுகளில் உள்ள நம் தூதரகங்கள் தற்காலிக சான்றிதழ் கூட வழங்கும்.இது நாட்டுக்கு நாடு மாறுபடும்.
5)உங்கள் பாஸ்போர்ட் தொலைந்து போனால் உடனடியாக பக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து ஒரு முதல் தவகல் அறிக்கை(FIR) வாங்கி,தேவையான ஆவணங்களுடன் இந்தியதூதரகத்தில் தர வேண்டும்.
6) உங்கள் பாஸ்போர்ட் எரிந்து போனால் உடனடியாக பக்கத்தில் உள்ள 'தீ அணைப்பு துறையில்' இருந்து ஒரு அறிக்கையும், காவல் நிலையத்தில் இருந்து ஒரு 'முதல் தவகல் அறிக்கை(FIR)' வாங்கி,தேவையான ஆவணங்களுடன் இந்திய தூதரகத்தில் தர வேண்டும்.
7) இதைவிட செய்ய வேண்டிய மிக முக்கிய வேலை என்னவென்றால் உங்களை தொலைத்தாலும் உங்கள் பாஸ்போர்ட்டை மட்டும் தொலைக்காதீர்கள் :)
********************************கட்டுரை முற்றும்*****************************