September 28, 2009

உயிரே பிரியாதே ***பகுதி - 8***




ஆபிஸை விட்டு வெளியே வந்ததும் பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்து சென்றான்.தலைவலி என பொய் சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டாலும் இப்போது எங்கே செல்வது, என்ன செய்வது,மீனாவிடம் காதலை சொன்னது தப்பா அல்லது சொன்னவிதம் தப்பா,ஏன் இப்படி இருக்கிறோம் என பல கேள்விகள் மனதை துளைத்து கொண்டிருந்தன.

பிரேமுக்கு போன் பண்ணலாமா என நினைத்தாலும் அவன் பிஸியாக இருப்பானே என்பதால் வேறு எங்கு செல்வது என யோசிக்க ஆரம்பித்தான்.
இவ்வளவு பெரிய பெங்களூரில் பிரேமை விட்டால் நண்பன் என்று சொல்லிக்கொள்ளவோ,உறவினர்கள் என்றோ யாருமில்லை.

சொந்த ஊரான சேலத்தில் கம்ப்யூட்டர் சயன்ஸ் டிகிரி முடித்தவுடன் சென்னை வேண்டாம்,பெங்களூர் போ.அங்கதான் கம்ப்யூட்டர் படிச்சவங்களுக்கு நிறைய சம்பளம் தராங்களாம் என யார்யாரோ ஊரில் சொல்ல யோசிக்காமல் கிளம்பிவிட்டான்.அப்பாவுடன் படித்த நண்பரின் பையன்தான் இந்த பிரேம்.

பெங்களுருக்கு வந்தவுடன் ஊரில் சொன்னதுபோல உடனே வேலை கிடைத்தது.ஆனால் சம்பளம்தான் பெரியதாக ஒன்றுமில்லை.கிடைத்த வேலையை வேண்டாம் என்று சொல்ல மனமில்லாததால் அதிலேயே சேர்ந்தான்.படிப்படியாக தேவையான நுணுக்கங்களை கற்று தேர்ந்தான்.இதோ மீனாவின் கம்பெனியில் சேர்ந்து 2 வருடங்கள் ஆகிறது.

மீனாவிடமும் மற்றவர்களிடமும் நல்ல பெயர்தான் எடுத்திருக்கிறான்.இவன் சேரும்போது மீனாவின் அப்பாதான் இந்த கம்பெனியை நிர்வாகம் பண்ணிகொண்டிருந்தார்.

சில மாதங்களில் தன் ஒரே பெண் மீனாவையும்,மனைவியையும் அம்போவென விட்டுவிட்டு காலமாகிபோனார்.

அதற்கு பிறகு MBA படித்துக்கொண்டு இருந்த மீனா தான் இந்த கம்பெனியை பைனான்ஸ் மேனேஜர் மூர்த்தியின் ஆலோசனையுடன் திறம்பட நிர்வகித்து வருகிறாள்.தேவையான் நேரங்களில் சூர்யாவும் தனக்கு தெரிந்த ஆலோசனைகளையும், உதவிகளையும் செய்து வருகிறான்.

மீனாவுக்கும் சூர்யா என்றால் ரொம்ப பிடிக்கும்.தன் அப்பா இறந்த சமயத்தில் உடன் இருந்து எல்லாவற்றையும் சிறப்பாக செய்து கொடுத்தான்.மீனா அலுவகத்தில் பொறுப்பேற்றபோதும் தனக்கு தெரிந்த எல்லா விஷயங்களையும் சொல்லிகொடுத்து இன்று கம்பெனி லாபகரமாக போய்கொண்டிருக்கிறது.

ஆனால் மீனாவுக்கு சூர்யாவின் மீது காதல் இருக்கிறதா என்று தெரியவில்லை.
பழைய ஞாபகங்களை அசை போட்டு முடிக்கையில் மதிய நேரம் ஆகிவிட்டு இருந்தது.

எங்கே செல்வது என தெரியாமல் கடைசியில் தன்னுடைய ரூமுக்கே செல்ல முடிவெடுத்து வந்த பஸ்சில் ஏறினான்.

0 comments: