December 31, 2009

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். 
 
 

என் இனிய சக நண்ப நெஞ்சங்களுக்கு,
 
உங்களுக்கும்,உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் அன்பு நண்பன் பூங்குன்றனின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இந்த ஆண்டு முதல் நம் எல்லோருக்கும் மகிழ்ச்சி பூத்துக்குலுங்க இயற்கை கடவுளை வேண்டுகிறேன்.
அலுவலக பணிச்சுமை காரணமாக உங்களை கடந்த ஒரு வாரமாக சந்திக்க முடியாமல் இருந்தாலும், இன்னும் ஓரிரு வாரங்களில் சந்திக்க இருக்கிறேன் புத்தும் புது ஆண்டில்....
 
நட்புடனும்,அன்புடனும்,
உங்கள் பூங்குன்றன்.வே

December 22, 2009

காதல் ஞானி !!!


 
நெடுவானத்தில் நீண்ட
கொடிமரத்து நுனியில்
அமர்ந்திருக்கும் பறவை
அறிய வாய்ப்பில்லை;

புகைகக்கி போகும்
புகைவண்டி சப்தத்தில்
மிச்சமிருக்கும் அதிர்வு
அறிய வாய்ப்பில்லை;

பதுங்கி மெதுவாய்
பகலை தின்றமயக்கத்தில்
படுத்திருக்கும் இரவு
அறிய வாய்ப்பில்லை;

பெண்மீது கொண்டகாதல்
பித்தனாக்கி சித்தனாக்கி
பாதைமாற்றி போதைஏற்றி 
பின்பு ஞானியாக்கும் என்று!!!

December 20, 2009

எஞ்சாமி எங்க போச்சு ?பகல் உழைச்சு இரவு தூங்க
நோவுக்கு தைலம் தேச்சி
காத்தால எந்திரிச்சா
கடன்கொடுத்தவன் கண்ணெதிர;
ஆயிரம் பொய் சொல்லி
அன்னிக்கும் வேலைக்கு போயி
ஐஞ்சு பத்து கூலிக்கு
இடுப்பொடிந்து வேலைசெஞ்சு
ஊட்டுக்கு சுருக்கா வந்து
உப்புபோடாம கஞ்சி குடிச்சி
உலக்கைய தலையில் வைச்சு
பாதிவுறக்க அசதியில
படுத்துக்கினு இருக்கறப்ப
மாராப்பு வெலக்கி இடுப்பை நெருக்கினவனை
பதறிபோய் பார்த்தா
'கம்முன்னு கிடந்தா கடனை அடைசிரலாம்'
கடன்கொடுத்த ராசா சொல்லுறப்ப
சுருக்குன்னு கோவம் தலைக்கேறி
பிஞ்சுபோன செருப்பாலடிச்சி
துரத்திவிட்டு நினைச்சுக்கிட்டேன்
எஞ்சாமி எங்க போச்சு;
கல்லாவே மாறி போச்சு !!!

December 18, 2009

ஒரு காதல் கதையும், சம்மந்தமில்லா ஒரு கவிதையும்.....

அது ஒரு அக்டோபர் மாதம்,வருடம் 1998.

கிராமத்தில் பிறந்த அந்த இளைஞன்,பட்டயப்படிப்பு முடித்ததும் வேலை தேடி அப்பாவின் மாணவர் ஒருவரின் வற்புறுத்தலினபேரில் பெங்களூர் நோக்கி பயணமாகிறான். கனவுகளும்,ஆசைகளும் நிறைந்த பயணம் அது.எதையோ சாதிக்க போகிறோம் என்கிற திமிர் அவன் கண்களில் தெரிந்தது.பெங்களூர் சென்ட்ரலில் வந்து இறங்கி தந்தை கொடுத்த முகவரியில் அந்த அண்ணா இருந்தார்.

என்ன சூர்யா?(இது நிச்சயம் இந்த கதையின் நாயகன் பெயராகத்தான் இருக்கும்). ஸ்டேஷன்ல இறங்கி ஒரு போன் பண்ணியிருந்தா நானே வந்து கூப்பிட்டு வந்திருப்பேனே?இல்லைண்ணா, பரவாயில்ல, உங்களுக்கு எதுக்கு சிரமமும் என்று நானே வந்துட்டேன்.

இன்னும் நீ மாறவில்லையா சூர்யா?மத்தவங்களுக்கு அதிகம் சிரமம் கொடுக்கமாட்டேன் என்னும் அந்த நினைப்பு சின்ன வயசில உங்கிட்ட பார்த்தது. இன்னும் நீ மாறல போல. சரி,கைகால் அலம்பிட்டு வா,சாப்பிடலாம் என்றார்.அவன் எப்பவும் இப்படித்தான். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்பது கூச்ச சுபாவம் என்றாலும் சூர்யாவை பொறுத்தவரை அது மற்றவர்களுக்கு நாம் தரும் சிரமம் என்று நினைக்கிற ரகம். தேவையானதை வீட்டில் கூட வாய்திறந்து கேட்ட மாட்டான்,நண்பர்கள் தவிர பிறரிடம் ரொம்ப சாதுவாக இருப்பான்;அதிகம் பேசமால் எதையோ எழுதிக்கொண்டு, படித்துக் கொண்டு இருக்கும் ரகம்;தம்பிகள் எதாச்சும் வலிய வந்து செல்ல சண்டை போட்டாலும் சிரித்துக்கொண்டே அவர்களின் வெற்றியின் மீது அதிக கவனம் வைக்கும் ரகம்;நீங்கள் எவனுக்கு எதிர்மாறாக இருந்தால் அது சூர்யாவின் தவறல்ல.ஒருவேளை நீங்கள் அவனைப்போலவே இருக்கும் ரகம் என்றாலும் அது சூர்யாவிற்கு மகிழ்ச்சி அல்ல.

நாளைக்கு என்கூட ஆபிஸ் வா.அங்கே எனக்கு தெரிந்த சில கஸ்டமர்ஸ் வருவாங்க, அவர்களிடம் எற்கனவே உன் வேலைய பத்தி பேசிட்டேன்,நாளைக்கு வரும் போது பேசலாம்ன்னு சொன்னாங்க.சரியா சூர்யா?
சரிண்ணா.நாளைக்கு நானும் உங்ககூட வரேன்..

மறுநாள் காலை அவருடன் அலுவலகம் சென்றதும் அங்கே இருந்தவர்களை அறிமுகப் படுத்தினார் ராமன்.கடைசியில் அவளிடம் வந்தார், மீனா, இவர் என்னோட தம்பி சூர்யா. ஊர்ல இருந்து வேலைக்காக வந்திருக்கான்..சூர்யா..இவங்க பெயர் மீனா, தமிழ்நாடு தான் பூர்விகம், நல்லா தமிழ் பேசுவாங்க.. சரி.. நீங்க பேசிட்டு இருங்க,நான் போய் என் வேலையை கவனிக்கிறேன்..

ஹாய் சூர்யா,எந்த ஊர் நீங்க?என்ன வேலை தேடுறீங்க?என்ன படிச்சிருக்கீங்க? உட்காருங்க,ஏன் நின்னுட்டே இருக்கீங்க?

படபடவென பேசிக்கொண்டே இருந்த மீனாவை எந்த பதிலும் பேசாமல் பார்த்துக்கொண்டே  இருந்தான் சூர்யா.

தலைவா,உங்க கிட்டதான் பேசிட்டிருக்கேன்,என்ன ஆச்சு?

ஹாங்..ஒண்ணுமில்லை மேடம்..

மேடமா, ஹல்லோ, கண்டிப்பா நான் உங்களைவிட சின்னபொண்ணுதான்னு நினைக்கிறேன், அப்படியே ஒருவேளை ஒண்ணு,ரெண்டு வயசு கூட என்றாலும் இந்த ஊர்ல மேடம்ன்னு கூப்பிட்டா...உதைப்பாங்க..தெரியுமா?

ஓஹோ..தெரியாதே மேடம்...சாரி...மீனா..

ஓகே..எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..நான் இன்னும் ஐந்து நிமிடத்தில் உங்ககிட்ட பேசுறேன்..நீங்க இந்த பேப்பரை பாருங்க.

'டைம்ஸ் ஆப இந்தியா'வை என் கைகளில் திணித்த அவளை ஒரு முறை பார்த்துவிட்டு சேரில் அமர்ந்து செய்திகளில் மூழ்கிவிட்டேன்...

ஹல்லோ...சூர்யா..இங்க வாங்க..இந்த மெய்ல பாருங்க..ஒரு லூசுப்பையன் ஆங்கிலத்தை எப்படி கொலை பண்ணி அனுப்பிருக்கான்?

சரிங்க..

என்ன சிரிக்கமாட்டீங்களா? இல்ல..பயமா இருக்கா? நான் ஒண்ணும் உங்களை கடிச்சுட மாட்டேன்..

இல்லங்க..அப்படில்ல..நான் அண்ணனை பார்த்துட்டு வரேன்..

ஓகே சூர்யா..

அப்பாடா தப்பித்தோம் என்று ராமன் அறைக்கு சென்றான்.

ஸாரி சூர்யா..கொஞ்சம் பிஸிப்பா..எதாச்சும் வேணுமா?மீனா என்ன சொல்றாங்க?

எதுவும் வேணாம்...ஜஸ்ட் நீங்க பண்ற வேலைய பார்க்கலாம்ன்னு இங்க வந்தேன்..தப்பா?

ச்சே.. ச்சே.. நீ உட்காரு.. இன்னும் ஒரு மணி நேரத்தில் ஒரு விஷயமா நான் சொன்ன கஸ்டமர்ஸ் வந்துடுவாங்க... ரெசூமும், சர்ட்டிபிகேட்ஸ் கைல இருக்குல்ல..

ரெடியா இருக்கு அண்ணே.

ஒரு மணி நேரம் கழித்து வந்த கஸ்டமர்ஸ் அவங்க வேலையை முடித்ததும், அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.

அரை மணி நேர நேர்முக தேர்வு மாதிரி முடிந்ததும்..நீங்க எப்ப ஜாயின் பண்றீங்க மிஸ்டர்.சூர்யா?

நாளைக்கே ஸார்.

குட்.இதான் நம்ம கம்பெனி அட்ரஸ்.நாளைக்கு ஷார்ப் ஒன்பது மணிக்கு வந்துடுங்க.

தேங்க்ஸ் ஸார்.

அந்த கம்பனியில் சேர்ந்து இரண்டு மாதத்தில்,மீனாவிடம் இருந்து குறைந்தபட்சம் ஒரு இருபது கால்ஸ் வந்திருக்கும்..நிறைய பேசினோம்..இல்லை..என்னை பேச வைத்தாள்.

மொத்த பெங்களூரையும் சுற்றி காட்டினாள்;குறிப்பாக கப்பன் பார்க்,பன் வேர்ல்ட்(Fun world) இரு இடங்களும் எங்களை நன்கு அறிந்தவை; கப்பன் பார்க்கில் உள்ள பூக்கள் வாரம் இருமுறை பூக்காது. காரணம் மீனா அந்த நேரத்தில் என்னுடன் பூங்காவில் இருப்பாள். பேச்சு.. பேச்சு.. எப்போதும் எதைப்பற்றியாவது பேசிக்கொண்ட இருக்கும் வகை அவள்; கேட்டுக்கொண்டே ரசிக்கும் ரகம் நான்;இப்படியே தொடர்ந்து மூன்று மாதங்கள் கடந்தது.

ஒரு சாயங்கால சனிக்கிழமை,ஹெப்பாலா சாலை ஓரம் நடந்துக்கொண்டு வழக்கம் போல பேசிக்கொண்டே வந்தவள் பேச்சையும், நடையையும் நிறுத்தி என் கண்களை சில வினாடிகள் பார்த்தாள்.

என்ன மீனா?என்ன ஆச்சு?

ஹ்ம்ம்..ஒண்ணுமில்லை....பார்க்கனும்ன்னு தோணிச்சு.

என்ன திடீர்னு இப்படி?

ஏன் நான் பாக்கக்கூடதா சூர்யா?

ச்சே..ச்சே..அப்படில்ல.என்னவோ நீ பண்றது புதுசா இருந்துச்சு..அதான் கேட்டேன்.
.......
.......
என்ன மீனா..பேசாம வர?

ஒண்ணுமில்லை..

சில அடிகள் நடந்ததும் அவன் கைகளை மீனா கோர்த்ததும் சூர்யா அதிர்ந்து விரல்களை பிரிக்க முயல்கையில் மீனா இன்னும் அழுத்தம் காட்டி கெட்டியாக கோர்த்துக்கொண்டாள்.

என்ன மீனா இது?

சூர்யா..என்னால வாய்திறந்து சொல்ல பயமா இருக்குப்பா.உன் கைப்பிடித்த காரணம் இப்போ புரியும்ன்னு நினைக்கிறேன் என்றவள் மறுபடியும் என் கண்களை பார்த்தாள்.அந்த பார்வை ஆயிரம் கதைகளை சொல்லியது..

புரியுது மீனா.இது எப்போலேர்ந்து?

தெரியல..ஆனா ரெண்டு மூணு நாளாவே உங்கிட்ட எப்படியாவது சொல்லனும்ன்னு ட்ரை பண்ணேன்.பட் வார்த்தை வரல.உனக்கு என்னை பிடிச்சிருக்கா சூர்யா?

என்ன சொல்றதுன்னு தெரியல மீனா.

நீ எதுவும் சொல்லவேணாம்டா.இப்படியே ஆயுசு முழுக்க உன் கைய பிடித்துக்கொண்டே இருந்தா போதும் சூர்யா..

ஹ்ம்ம்..சரி..மீனா.

(இதற்குமேல் கதையை எப்படி முடிப்பது என்று நன்றாக தெரியும்; உண்மையில் இந்த காதல் ஜோடிகள் காலமாற்றத்தால்,சூழ்நிலையால் பிரிந்துவிட்டனர்.தற்போது மீனாவுக்கும்,சூர்யாவுக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை;என்றேனும் ஒருநாள் பார்க்கையில் இருவரும் பேசலாம்,அழலாம் அல்லது பார்த்தும் பேச பிடிக்காமல் தங்கள் பாதை நோக்கி போகலாம்; இது உண்மைக்கதையும்,  இருவரும் தங்களுக்குள் அவரவர் காதலெனும் உயிர்ப்பூவை இன்றளவும் பாதுகாத்துக்கொண்டே வரும் உண்மையும்;)

ஆனால் இந்த சூர்யா,மீனா காதலை பிரிக்க இந்த கதையை எழுதிய நான் விரும்ப வில்லை..என்னைப்பொருத்தவரை சூர்யாவின் கைகளை கோர்த்த மீனா இன்னும் பிடித்துக்கொண்டே இருக்கிறாள்.சூர்யாவும் மீனாவின் கையை அழுத்தமாக இன்னும் அழுத்தமாக பிடித்துக்கொண்டே இருக்கிறான்.. பாவம்,அப்படியே அவர்கள் காதலித்துக்கொண்டே இருக்கட்டுமே...

கவிதை எழுதாம மனசும்,கையும் சும்மா இருக்கமாட்டேங்குங்க.

நினைப்பின் ஊடே
நீண்ட தூர அலைகடலில்
நீந்தி கரையேற துடிக்கிறேன்;

மங்கிய நிலவொளியில்
தொலைத்த உன் இதயத்தை
கிடைக்காதென தெரிந்தும் தேடுகிறேன்;

பனிவிழும் பூங்காவில்
கால்தடம் தேடி காதலித்த
கணங்களை காண காத்திருக்கிறேன்;

வரமாட்டாய் என தெரிந்தும்
மனசு கேட்காமல்
வீறிட்டு அழுகிறேன்;

December 16, 2009

கலியுக பூசாரி !!!


(இந்த கவிதை எந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது என்று தலைப்பையும்,கவிதையின் கடைசி வரியையும் படித்தாலே தெரியும்..)

காதல் நீரோடையில்
தேங்கிய காமத்தை
எடுத்து பருக
நெருங்கி வந்து
நெற்றி பொட்டில்
முத்தம் பதித்து
முன்னுரை எழுதா
முதல் இரண்டு
பாகத்தை தொட்டுதிறக்கையில்
பதுங்கிய உன்வெட்கம்
பாய்ந்து விலக
கண்கள் சொருக
அனல்மேல் துடித்து
அழுந்திய உடல்கள்
அமிர்தம் குடிக்க
அகிலமும் மறந்து
சகலமும் துறந்து
தரையில் சாய்கையில்
தலையில் முட்டியது
கோவில் மூலஸ்தானம்;

December 14, 2009

கவிதைகள்: ஒரு ஸ்வீட்; ஒரு சோகம்;
ஸ்வீட் :
கல்லூரி தேவதையாமே நீ;
கனவு கன்னியாமே நீ;
உன் ஒருபார்வை பொருட்டு
தவம்கூட கிடக்கிறார்களாமே;
நண்பர்கள் என்னிடம் சொல்கையில்
நகைப்புக்கு அளவே இல்லை;
என்றோ பூத்த நம் காதலை
எப்படி சொன்னால் நம்புவார்கள்!!!

 

 சோகம்:  
ஒற்றை மேகத்தில்
ஒளிந்திருக்குமோ;
திசைமறந்த கிழிந்த காகிதமாய்
தெருவோரம் அலைபாயுமோ;
வெட்டிய மின்னளிடுக்கில்
வேகமாய் மறைந்திருக்குமோ;
சொல்ல பயந்த என் காதல்;

December 13, 2009

காதல் வலியது !!!


உன்மீதான என்காதலை
என்னுள் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்;
என்றேனும் ஒரு நாள்
எதிர்பாரா சந்திப்பில்
நிராகரிப்பின் வலியினை
நீயும் அறியக்கூடும்
கொண்ட காதலை திருப்பி தருகையில்...


நம் முன்னொரு காதல் காலங்களில்
நீ கொடுத்த காதல் கடிதங்கள்,பரிசுகள்;
இன்றொருநாள் கோபத்தில் எரிக்கையில்
தீ ஏனோ வான் முட்ட எரிகிறது;
திருஷ்டி பட்டிருக்குமோ ?

December 12, 2009

உயிரின் ஆணிவேர் மனைவியானால்...ஐ.எஸ்.டி கால் போட்டு
அப்பா,அம்மா,அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை....
பேசி முடித்து
பில் பார்த்து பதறி
வைக்க போறேன்னு சொல்லும் சமயம்
'உடம்பை பத்திரமா பார்த்துக்குங்க'
ஒற்றை வரியில் என் உயிரின் ஆணிவேரை
ஒரு நொடி அசைத்துப்பார்க்கும்
மனைவிக்கு
மறுஜென்மம் நான் தாயாக வேண்டும்;

December 11, 2009

"LOVE YOU DADDY"- குட்டி கதை.

இப்போ நான் உங்களுக்கு ஒரு சிந்தனையை தூண்டும் ஒரு கதை(பாடம்) சொல்ல போறேன். கவனமா படிங்க.ஒரு காலை வேளையில் அலுவலகம் செல்வதற்காக ஒரு அப்பா தன்னுடைய புது காரை மிகுந்த பக்குவத்துடன் துடைத்து கழுவிக்கொண்டிருந்தார்.அப்பாவுடன் அந்த நான்கு வயது நிறைந்த மகனும் இருந்தான்.

அப்பா துடைத்துக்கொண்டிருப்பதை பார்த்த அந்த மகன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரில் என்னவோ கிறுக்கி கொண்டிருந்தான்.
இதை கண்ட அப்பா கடும்கோபம் கொண்டு சற்றும் யோசிக்காமல் கையில் கிடைத்த ஒரு இரும்பு கம்பி என்பதை உணராமல்(கோபம் கண்ணை மறைக்குமே)தன் மகனின் கைகளில் ஓங்கி அடித்துவிட்டார்.வலியில் அந்த சிறுவன் கதற துவங்க,அம்மாவும் உள்ளிருந்த ஓடிவர,அடித்த அப்பாவும் தன் மகன் கதறுவதை பார்த்ததும் உடனே அவனை வாரியெடுத்து காரில் போட்டு மருத்துவமனைக்கு சென்றார்.  

சிறுவனை சோதித்த மருத்துவர்கள் அடி பலமாகபட்டிருப்பதால் இரண்டு விரல்களை எடுத்தே ஆக வேண்டுமென்று சொல்ல,அப்பா அதிர்ந்தே போனார்.எவ்வளவோ முயன்றும் மருத்துவர்கள் சொன்னபடி இருவிரலை எடுத்தும் விட்டார்கள்.

சற்று நேரம் கழித்து அந்த சிறுவன் அப்பாவிடம் "எப்பப்பா எனக்கு இந்த ரெண்டு விரல் வளரும்?"வினவ,அப்பா அழுதுகொண்டே வேகமாக வெளியில் ஓடிவந்து தன் காரை காலால் எட்டி உதைத்தான்.அப்போதுதான் தன் குழந்தை கிறுக்கிய வாசகம் கண்ணில்
பட்டது."LOVE YOU DADDY".

கோபமும்,அன்பும் எல்லை அற்றது(NO LIMITS).எந்த உணர்ச்சிகளையும் நாம் அளவாக கையாண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.தெளிந்த நீரோடை போல அழகாக இருக்கும்.முன்பு:"பொருட்கள் என்றால் உபயோகப்படுத்துவதற்காக"-"மக்கள் என்றால் அன்பு காட்டுவதற்காக"...இன்றோ:"பொருட்கள் என்றால் அன்பு காட்டுவதற்காக"-"மக்கள் என்றால் உபயோகப்படுத்துவதற்காக"....

சிந்திப்போம்.மகிழ்ச்சியாக இருப்போம்.

December 10, 2009

ஒரு சொல்லில் நான்கு மழலை கவிதைகள் !!!


ஒண்ணு
ரெண்டு
மூணு
ஏழு
எட்டு
ஐந்து...
ரசித்தேன்
குட்டவில்லை;

தூண்
துரும்பு
கல்
கோவில்;
தெய்வம்
சிலசமயம்
கருவிலும்...

அப்பா
அம்மா
யார்பிடிக்கும்?
கேர்ள்பிரண்ட்
என்றது
மழலை;

எருமை
பன்னி
நாய்
எதுபிடிக்கும்?
அப்பா
என்றது;
அதுசரி
அம்மாவை
அச்செடுத்த
அழகுமழலை;

December 9, 2009

அன்பு தோழியின் அழகு கவிதைகள்- சிறு அறிமுகம்.என்னை வலை உலகிற்கு அறிமுகப்படுத்திய என் அன்பு தோழி கல்யாணி பாஸ்கரின் கவிதைகள் இங்கே உங்கள் பார்வைக்கு..
என் தோழி நிறைய கவிதைகள் எழுதியிருந்தாலும் எனக்கு பிடித்தமான கவிதைகள் இவை.
தற்சமயம் அவர் நேர பற்றாக்குறையால் தொடர்ந்து எழுத முடியாவிட்டாலும் கூடிய விரைவில் புதுப்பொலிவுடன் தன் வலைப்பூவை தொடர்வார்.(கல்யாணி...கம் அகைன்)
(எழுத்துக்கள் தெளிவாக தெரிய படங்கள் மீது கிளிக் பண்ணுங்கள்.)

December 8, 2009

நான்கு மெழுவர்த்திகள் நமக்கு கற்று தரும் நம்பிக்கை !!!
ஓர் இருட்டு அறையில் நான்கு மெழுகுவர்த்திகள் ரம்மியமான அழகோடு ஒளிவீசி கொண்டிருந்தன. சற்று நேரம் சென்றதும் அந்த நான்கில் மூன்று பேச ஆரம்பித்தன.

முதல் மெழுகுவர்த்தி "அமைதி" :
இவ்வுலகில் அமைதி என்கிற நான் இல்லை. எங்கு பார்த்தாலும் சண்டை,வன்முறை, தீவிரவாதம்,கடன் என இருக்கின்றன.அப்படிப்பட்ட உலகில் நான் வசிக்க விரும்பவில்லை என்றவாறு அணைந்துபோனது.

இரண்டாவது மெழுகுவத்தி "உண்மை":
இவ்வுலகில் உண்மை என்கிற நான் இல்லை. எங்கு பார்த்தாலும் பொய்,குழு சண்டை,தேர்தல் வாக்குறுதி, இலவசம் என்றே இருக்கின்றன.அதனால் இங்கு வசிக்க விரும்பவில்லை என்றவாறு அணைந்துபோனது.

மூன்றாவது
மெழுகுவத்தி "அன்பு":
இவ்வுலகில் அன்பு என்கிற நான் இல்லை. எங்கு பார்த்தாலும்  என்றே பணம்,சுயநலம்,அடிதடி என்பதே பிரதானமாக இருக்கின்றன.நீங்கள் இருவர் மட்டுமின்றி நானும் அணைந்து போனால்தான் இம்மக்களுக்கு புத்தி வரும்,அறியாமை என்கிற இருளில் கஷ்டபடட்டும் என்றபடி தன்னை அணைத்துக்கொண்டது.

இந்த மூன்றும் அணைந்த நிலையில் ஒரு மழலை அந்த அறைக்கு வந்து,அணைந்திருந்த அந்த மூன்று மெழுகுவர்த்திகளை பார்த்தபடி எரிந்து கொண்டிருந்த நான்காவது திரியிடம் சென்றது.மூவரும் ஏன் இப்படி அணைந்தனர் என வினவியது.

நான்காவது மெழுவர்த்தி "நம்பிக்கை":
கவலைப்படாதே! நம்பிக்கை என்கிற நான் விடாமுயற்சியுடன் எரிந்து கொண்டிருக்கிறேன்.அணைய மாட்டேன்.அணைந்து போன அமைதி,உண்மை,அன்பு இவற்றை நம்பிக்கை என்கிற என்னை கொண்டு நீ மறுபடியும் ஏற்ற முடியும்.நீ செய்வாயா என்றது.

இதை கேட்ட அந்த மழலை தன் பிஞ்சு கரங்களால் நம்பிக்கை ஒளி கொண்டு மற்ற மூன்றையும் ஏற்ற ஆரம்பித்தது. அறை முழுதும் பிரகாசமானது.


அமைதி,உண்மை,அன்பு மூன்றும் பெரிதுதான் என்றாலும் நம்பிக்கை என்ற ஒளி கொண்டு தான் அடைய முடியும் என்பதை அந்த மழலை உணர்ந்தது. நாம் எப்போது உணர போகிறோம்?

December 7, 2009

கடவுள் ஏன் கல்லானான்?
குருதி ஆற்றில் கால் நனைத்து
குழு பிணங்களின் வாசனையில்
காயமுற்றவனின் முதுகின் மீதேறி
கனவுகளையும்,மண்ணையும் விட்டு
திக்கற்று திசையற்று
கண்கெட்டும் தூரம் வரை
கால்கள் நோக நடக்கிறோம்
கடவுளென பூஜைகள் செய்த
அந்த கல்லையும்  தாண்டி......

December 6, 2009

இன்னமும் அங்கேயே அவர்கள்...காலை எழுந்து அலுவலகம் செல்ல
காலுறை அணியும்போது
வந்து தொலைக்கிறது எவனோ
ஒருவனின் செருப்பில்லாத கால்கள்.

நீண்ட வருடங்கள் தவம் செய்து
பெற்றெடுத்த பிள்ளை அவளை
முதியோர் இல்லத்தில் சேர்க்கையில்
பெற்றவளின் மனசு குளிருமோ ?

பெய்யும் மழைக்கு ஹீட்டர் போட்டு
பெரிய எல்.சி.டியில் புதுப்பட டி.வி.டி
இலவச டிவியில் ஒன்றும் வராமல்
தவிப்பானோ முக்காடிட்ட குடிசைவாசி?

மொபைல் லேப்டாப் வீடு தங்கம்
கார் வாங்க லோன் போடணும்
வேர்வை நாற்றமின்றி இன்றொரு நாள்
புணர்ச்சி செய்யணும் மல்லிகைப்பூ கடன்வாங்கி..

December 5, 2009

உன் பேர் சொல்ல ஆசைதான்.....

குவைத் ஏர்போர்ட் வாசல் வரை வந்த சதீஷ்,என்னை டிராப் செய்ததும் கிளம்ப தயாரானான்.

சூர்யா..ஊருக்கு போயிட்டு எல்லோரையும் கேட்டதா சொல்லு.நான் வரேண்டா.

டிராப் பண்ணதுக்கு தேங்க்ஸ் மச்சி.நீயும் ஊரை சுத்தாம வேலைய மட்டும் பாரு.நான் கிளம்பறேன்.. ப்ளைட்டுக்கு நேரம் ஆச்சு.

ஏர்போர்ட்டில் நுழைந்து, சென்னை செல்லும் விமானத்தில் லக்கேஜ் அனைத்தையும் போட்டு,போர்டிங் பாஸ் வாங்கி,செக்-இன் முடிந்து வெய்டிங் ஹாலுக்குள் நுழைந்து இருக்கையில் அமர்ந்து மணி பார்க்கையில் ஏழு காட்டியது.விமானம் புறப்பட இன்னும் ஒரு மணிநேரம் இருக்கிறது.இரவு நேரம் என்பதால் குளிர் கொஞ்சம் அதிகமாக இருந்தது. ஏ.ஸியை கொஞ்சம் குறைத்து வைத்து இருக்கலாமோ?

ஆப்பிளில் பிடித்த பாடல்கள் என் காதுகளை ரீங்காரமிட்டு கொண்டு இருந்தது.கண்களை மூடி என் முன்னாள் காதலியை பற்றிய நினைவுகளை அசை போட்டுக்கொண்டே இருக்கையில் மொபைல் ஒலித்தது.ஒய்ப் பெயர் திரையில் காட்டியது.

என்னம்மா...

எங்க இருக்கீங்க? ப்ளைட் ஏறிட்டீங்களா?

இல்லம்மா.இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு.பாப்பா என்ன பண்றா?

அவ தூங்கிட்டா.சரிங்க..பார்த்து வாங்க.ப்ளைட் உள்ள போன உடன் ஒரு போன் பண்ணிடுங்க..சரியா?

சரிப்பா பண்றேன்.வைச்சுடுறேன்.

போனை வைக்கவும் ப்ளைட்க்கு வரசொல்லி அழைப்பு வர வரிசையில் நிற்க ஆரம்பித்தேன்.

ஹே..ஹே..சூர்யா..ஓடாத..ஓடினா...அம்மா அடிப்பேன்.

தன் பேராக இருக்கிறதே என்று ஒரு கணம் ஆச்சர்யமாக திரும்பி பார்க்கையில் அங்கே மீனா ஒரு சிறு பையனை பிடிக்க ஓடிக்கொண்டு இருந்தாள்.

ஒரு நிமிடம் உலகை மறந்து சூர்யா நின்று விட்டான்.இவளை வாழ்நாளில் சந்திக்கவே கூடாது என்றல்லவா இருந்தோம்.இவள் இங்கே எப்படி?

அங்கே..இங்கே ஓடிய அந்த சூர்யா என்னிடம் வந்து என் கைகளை பற்றி இழுத்தான். என்னுடைய பேன்ட் பாக்கெட்டில் அவன் கைகளை நுழைக்க முயன்று கொண்டு இருக்கும்போதே மூச்சிரைக்க ஓடி வந்த மீனா 'ஸாரி ஸார்' என்றபடியே என்னை பார்த்து திடுக்கிட்டாள். சூர்யா..நீங்க..இங்க..எப்படி இருக்கீங்க?நல்லாயிருக்கேன். நீ….நீங்க எப்படி இருக்கீங்க?

ஹ்ம்ம்.நல்லாயிருக்கேன்.அவன் என் பையன் தான்.பேரு சூர்யா.

ஓ..ஐ ஸீ. நைஸ் நேம்.

நானும் இதே ப்ளைட்ல தான் வரேன்.

அப்படியா..சந்தோஷம்..நான் கிளம்புறேன் மீனா.

சரி சூர்யா.இருவரும் பேசுவதையே பார்த்துகொண்டு இருந்த குட்டி சூர்யாவை கைப்பிடித்து
கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

விமானத்துக்குள் நுழைந்து சீட் பார்த்து உட்கார்ந்தான் சூர்யா.மனசு என்னவோ கொஞ்சம் பாரமாக இருப்பதுபோல் தோன்றவே கண்களை மூடினான்.

மனைவி போன் பண்ண சொன்னது ஞாபகம் வர,மொபைலை எடுத்து மனைவி பெயரை அழுத்தினான்.

டாடி..எங்க இருக்கீங்க? எப்ப வருவீங்க?

ஹை செல்ல பொண்ணு..நான் வீட்டுக்கு தான் வந்துகிட்டே இருக்கேன்.அம்மா எங்கே ?

அம்மா..டாடி கூப்பிடுறாங்க.வாங்க.

என்னங்க.ப்ளைட் ஏறிட்டீங்களா? நம்ம மீனா ரொம்ப சமத்துங்க.இப்பலாம் போன் வந்தா அவளே ஆன் பண்ணி பேசுறா.சரி.நீங்க சீக்கிரமா வாங்க.நான் வைச்சுடுறேன்.

போனை வைத்துவிட்டு ப்ளைட்டில் மீனாவை தேடினேன்...அவள் தன் பையன் சூர்யாவுடன்
ஏதோ பேசிக்கொண்டு இருந்தாள்.

ப்ளைட்டிலும் ஏஸி காற்று கொஞ்சம் அதிகமாக இருந்தது.

December 4, 2009

கவிதை மலரெடுத்து உனக்கு சூட்டுவேனடி ..

அந்தி மாலை நேரம்.மொட்டை மாடி.முழு நிலவாய் என் தலைவி.என் கண்கள் பார்த்து ஏதோதோ கதை அளாவிக்கொண்டு இருந்தவள் சட்டென ஒரு புள்ளி வைத்து என்னிடம் கேட்டாள்,மாமா,எனக்கு இப்போதே பூ ஒன்று வேண்டும் தலையில் சூட.சரி வாங்கி வருகிறேன்,என்கிறேன்.இல்லையில்லை எனக்கு இப்போதே வேண்டும் வேண்டும் என்கிறாள்.நம்மிடம் என்ன பூந்தோட்டமா இருக்கிறது உடனே பறித்துகொடுக்க,சற்று பொறு,கடைக்கு சென்று வாங்கிவருகிறேன் என்கிறேன்.நீங்கள் எனக்கு எல்லா பூவையும் வாங்கி கொடுத்துவிட்டீர்கள்.யாரும் வாங்கித்தாராத பூவொன்று இங்கயே வேண்டும் என பிடிவாதம் பிடிக்க,மனம் அன்பு தலைவிக்காக யோசித்தது.சற்று நேரம் சென்றதும், 'சரிம்மா,நீ கேட்ட அப்படி ஒரு பூ இருக்கிறது' என்றேன்.அப்படியா? என்ன பூ என என் தலைவி கேட்ட,நான் சொல்ல ஆரம்பிக்கிறேன்.

கொஞ்சம் காதல்
கொஞ்சம் காமம்
கொஞ்சம் ஊடல்
கொஞ்சம் தேடல்
இவை கலந்து
நிறைய முத்த நீரூற்றி
மன செடியில் பதிய வைத்து
மேகத்தில் ஒளிய வைத்த
கவிதை மலரெடுத்து
கண்மணி உனக்கு சூட்டுவேன் இதோ !!!

எனக்கு கடைசியில் கவிதைப்பூவையே தலையில் சூட்டுகிறீர்களா? கில்லாடி தான் நீங்கள்,இப்போதே சூட்டுங்கள் என்றவள் அருகில் வந்து கைகளை இறுகப்பற்றுகிறாள்;அந்த இறுக்கத்தில் உலகம் உள்ளவரை உன்னுடன் இருப்பேன் என்கிற அர்த்தம் புரிந்தது.எனக்கோ அந்த உலகமே என் உள்ளங்கையில் அடங்கியது போலிருந்ததது.வானத்து விண்மீன் எங்களை பார்த்து வெட்கத்தில் கண்சிமிட்டி விட்டு மறைந்தது.

December 3, 2009

என் முதல் ஆங்கில கவிதையும், கடவுளிடம் கேட்க இருக்கும் வரங்களும்.

என் முதல் ஆங்கில கவிதை.


HARSH BULL 


Generally my heart is gold
if Challenge
comes i will become lion
always i tell you the truth
always i do lot good

i get success and success
come we dance,sing and celebrate
we seek pleasure all the time
come we dance,sing and celebrate

one bull is staring at me
one more bull is coming back at me
i can win these two bulls
i don't have fear in my heart
i don't bother about anybody
will success come to me ??????
டிஸ்கி 1 : கண்டிப்பாக இது தலைவரின் 'பொதுவாக என் மனசு தங்கம்' பாடலின் ஆங்கில மொழியாக்கம் இல்லை.ஹி ஹி ஹி...

டிஸ்கி 2 : உனக்கு தமிழ்லயே ஒழுங்கா கவிதை எழுத வராது..இதுல இங்கிலீஷ்ல கவிதையா என்று துப்புவது சரியில்லை பாஸ்.வேணும்னா அடுத்தமுறை
ஹிந்தில கவிதை எழுதட்டுமா :)


            **********************
கடவுளிடம் கேட்ட வேண்டிய வரங்கள்:


கடவுள் என் முன்தோன்றினால் என்ன வரம் கேட்பது என்று யோசித்தேன்..கடவுளை நேர்ல நாம பார்ப்பதே ஒரு வரம்.
அவர் நம்மகிட்ட ஒரு பதிவோ,பின்னூட்டமோ போடாம தீடிரென வந்து கேட்டால் நான் மறந்து விட மாட்டேனா...
அதான்  ஒரு லிஸ்ட் போட்டு இருக்கேன்.


1) அமெரிக்க சம்பளம்
2) இங்கிலாந்து வீடு
3) இந்திய மனைவி
4) ஜப்பான் கார்
5) சைனீஸ் உணவு
6) பின்லாந்து மொபைல்
7) சுவிச்சர்லாந்து பணம்
8) ஆப்பிரிக்கா வைரம்
9) சிங்கப்பூர் விமானம்
10) தமிழ்மண விருது & தமிளிஷ் வோட்டு (ஹி ஹி ஹி) டிஸ்கி : முதல்ல உருப்படியான பதிவை போடணும்ன்னு வேண்டிக்க எருமை :)

December 2, 2009

துணை வேண்டி...(உரையாடல் கவிதைப் போட்டிக்காக)


துணை வேண்டி....


கடல் கடந்து உறவுகள் பிரிந்து
ஓர் அறையில் ஒற்றையில் காலம் போகையில்...

வந்த புதிதில் வந்த
பறவை,பூனை,பல்லி,எறும்பு,ஈ
இவைகள் யாவும்
இப்போது என்னுடன் இல்லை;

என்னை போல கடன் சுமை
காரணமாகி கடல் கடந்து போனதுவோ?
காதல் கொண்டு பின்பு கைவிட்ட
காதலி நினைவாய் ஏக்கமாய் திரிகிறதோ?

எங்கேனும் பார்த்தால்
என் வீட்டுப்பக்கம்
வர சொல்லுங்கள்
சற்று நேரம் ஆறுதலாக பேச....

December 1, 2009

இனிப்பு; காரம்; கொஞ்சம் தேநீர் : கவிதைகள்


     
     இனிப்பு
நீ சிரிக்கையில்
புதிதாய் பூத்த மலராய்
உன் புன்னகை;
நீ பிரிகையில்
மழைக்காக ஏங்கிக்கிடக்கும்
நிலமாய் மனது!!!

         காரம்
யாரோ தூக்கி எறிந்த
உபயோகிக்கமுடியாத
தெருவோர மிதிவண்டியை
நினைவுபடுத்துகிறது
நம் காதல் நாட்கள்!!!

      கொஞ்சம் தேநீர்
இப்பொழுதெல்லாம் கவிதை எழுத
அதிகம் சிந்திப்பதில்லை
காதலில் தோல்வி !!!