November 21, 2009

என் மறுபிறப்பின் கதை ..பாகம் - 2

தூங்கிக்கொண்டே இருந்த வேளையில் கண்ணுக்கு நேராக கடும் அனலை உணர்ந்தேன்.

சட்டென முழிப்பு தட்டி படுக்கையில் இருந்து எழுந்து பார்க்கையில் என்னை சுற்றி ஒரே தீயாய் எரிந்து கொண்டிருக்கிறது.ஒரு நிமிடம் இது கனவா இல்ல நிஜமா என்றே புரியவில்லை எனக்கு.அந்த அனலில் உடம்பு தகிக்கிறது.

நிஜம் என்று புரிந்த அடுத்த வினாடி தீ இல்லாத இடம் எது என்று கண்கள் தேடியது உயிரை காப்பாற்றி கொள்ள. கதவு வழி பக்கம் மட்டும் ஒரு ஆள் போகும் அளவு தீ சற்று இல்லாமல் இருப்பது போல் தோன்றவே கொஞ்சமும் தாமதிக்காமல் வெளியே ஓடினேன்.

வெளியில் ஓடி வந்த அடுத்த நிமிடம் 'தீ அணைப்பு தெளிப்பானை(Fire Extingusher)' தேடினேன். அடடா..அது தீயினில் அல்லவா உடன் சேர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது! தண்ணீரும் கைகிட்டும் தூரத்தில் எதுவும் தட்டுபடவில்லை.
கொஞ்சம் தாமதித்தாலும் தீ வேகமாக மற்ற இடங்களுக்கு பரவக்கூடிய அபாயம் இருந்தபடியால் நேராக பாதுகாப்பு அலுவலகம் நோக்கி ஓடினேன்.

பணியில் இருந்த பாதுகாவலருக்கு நான் விளக்க வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை, ஏனெனில் தீ விண்ணை நோக்கி எரிந்து கொண்டு இருப்பதை அவரும் கவனித்து விட்டார்.உடனே ரேடியோவில் (நம்மூர் டிராபிக் போலீஸ் வைத்து இருப்பார்களே)
'அவசர தகவல்' என்று சொல்லிபடியே முகாமில் உள்ள அபாய சங்கை அழுத்தினார்.

அடுத்த சில நிமிடங்களில் முகாமில் உறங்கிக்கொண்டு இருந்த அனைவரும் வெளியே ஓடி வந்தனர். என் அறைக்கு வந்தவர்கள் அனைவரும் தீயின் உக்கிரத்தை பார்த்து பயந்தாலும் சுதாரித்து கொண்டு அணைக்கவேண்டிய முயற்சிகளில் இறங்கினார்கள்.

எல்லோரும் அங்கும் இங்கும் ஓடுகிறார்கள். தண்ணீர் ஊற்றப்பட்டது,தீ அணைப்பு கருவிகள் மூலம் சிலர் முயன்று கொண்டிருக்கிறார்கள்.இருபது நிமிடங்கள் கழித்து தீ அணைப்பு வண்டிகள் வந்தன.அவற்றின் மூலம் தான் தீயை சற்று சமாதனப்படுத்த முடிந்தது.

என் அறை மொத்தமாக எரிந்து முடிகையில் சரியாக மணி 11.30 காட்டியது. இந்த தீயை அணைக்கும் களேபரத்தில் எல்லோரும் என்னை மறந்து போயிருந்தனர்.


செப்டம்பர் மாதம் என்பதால் இரவின் குளிரும்,கண்ணீரின் கதகதப்பும் என்னை ஏதோ ஒரு நிலைக்கு தள்ளியிருந்தது.

பாதுகாப்பு அலுவலகம் நோக்கி கண்,மண் தெரியாமல் வேகமாக ஓடுகையில் கால்தடுக்கி விழுந்ததில் இடது காலின் சுண்டுவிரல் நகம் முழுதுமாய் நசுங்கி இருந்தது,
அடிப்பாதத்தில் சிறிது சதையும் கிழிந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.அந்த வலியாலும்,சட்டை போடமால் இருந்ததினால் குளிராலும்,உயிர் பிழைத்த அதிர்ச்சியாலும் என் உடம்பு நடுங்கி கொண்டிருந்தது.ஒரு ஓரம் நடக்க முடியாமல் உட்கார்ந்திருந்தேன்.

எல்லாம் முடிந்து இருக்கையில், 'பூங்குன்றன் எங்கே?' என்று என் நண்பர்கள் ரமேஷ்,வினய்,மரியா அண்ணா மற்றும் உடன் பணிபுரிவோர் என்னை தேடி அங்கே,இங்கே அலைந்து கொண்டிருந்ததை பார்த்தாலும் என்னால் குரல் எழுப்ப முடியாத அதிர்ச்சி என்னை ஆட்கொண்டிருந்தது.

ரமேஷ் என்னை பார்த்துவிட்டு அருகில் ஓடி வந்தான்.'மச்சான் என்ன ஆச்சு? உனக்கு ஒண்ணுமில்லையே?'.அதற்குள் மரியாவும்,வினய்யும்,மற்றவர்களும் என்னை நோக்கி ஓடிவருகின்றனர்.


'வாட் தி ஹெல் இஸ் கோயிங் இயர்', 'பூங்குன்றன் இஸ் அலைவ்', 'ஆர் யு ஆல்ரைட்', 'வாட் ஆபன்ட்' இப்படி அவரவர் பேசிக்கொண்டும்,என்னை கேள்வி கேட்டுக்கொண்டும் இருக்கிறார்கள்.

ரமேஷ் : மச்சான் எப்படி ஆச்சு? உனக்கு எதுவும் அடிபடலியே?
நான்: இல்லடா.எனக்கு எதுவும் இல்ல.நான் நல்லா தான் இருக்கேன்.
ரமேஷ்/மரயா/வினய் : தீ எப்படி வந்தது?
நான்: தெரியலடா.தூங்கிட்டு இருந்தேன்.என்னவோ சூடா இருக்குன்னு கண்ணை திறந்து பார்த்தா என்னை சுத்தி தீ .
ரமேஷ்: சரி..சரி..விடு.வா.என் ரூமுக்கு வந்து முதல்ல தண்ணி குடி,ரெஸ்ட் எடு.
நான்: எல்லாம் தீயில கருகி போச்சுடா.ஆமா..என்னோட பாஸ்போர்ட் எங்கே?

10 comments:

அன்புடன் மலிக்கா said...

அச்சோ இங்கும் தீ பத்திக்கிச்சு அடுத்து என்னாச்சின்னு..

வெளிநாடுகளுக்கு போய்விட்டு நாம் படும் கஷ்டங்களிருக்கே அப்பப்பா, சொல்லவழியில்லை சொல்லியும் ஒன்னும் ஆவதில்லை..

நாளைவரை காத்திருக்கனுமோ?????

நாஞ்சில் பிரதாப் said...

படிக்கும்போதே பீதியாக இருக்குது. ஸ்பாட்ல எப்படி இருந்திருக்கும்... பாஸ்பார் என்னாச்சு தலைவா???

MARIA said...

மரண பயம் என்பது என்ன என்று பார்த்தது, இன்னும் கண்ணை விட்டு அகல வில்லை. தீ என்பது , உலகத்தின் உக்கிரமான ஒன்று என்று , அன்று தான் காண முடிந்தது.

மனிதர்கள் எவ்வளவு சாதித்தாலும் , இயற்கையை வெல்ல முடியாது , என்பது அன்று நடந்தது ஒரு சான்று.

இதை பார்த்த எங்கள்ளுக்கு , இப்படி இருந்தால், நிஜைத்தை அனுபவித்த உங்கள்ளுக்கு எப்படி இருந்திருக்கும் ??????????????

தொடரட்டும் அனுபவம் .........................

Vijay said...

நண்பா சுவாரஷ்யம் குறையாமல் இருக்கு.
இப்போ நினைத்து பார்த்தாலும் அந்த இரவு.......... ஹய்யோ மறக்க வேண்டிய இரவுகளில் ஒன்று.......

முனைவர்.இரா.குணசீலன் said...

மரணத்தின் அருகில் சென்று வந்தமையை உணர்வுபூர்வமாச் சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே...

ஒவ்வொருவரும் அடுத்த நொடியின் நிகழ்வுகளை அறியாது தான் வாழ்ந்து வருகிறோம்..

அந்த அடுத்த நொடி இன்பம் துன்பம் என எதைக் கொண்டு வருகிறது அதை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் ...

என்பதில் தான் நம் வாழ்க்கை அடங்கியிருக்கிறது...

mix said...

நண்பர்கள் கவனத்திற்கு

தமிழர்ஸ் தளத்தில் உங்கள் பதிவை இணைக்கலாம் வாங்க....

ஆங்கிலம் | தமிழ் | SEO Submit
காணொளி தேடல் | வலைப்பூக்கள் | இங்கே நீங்கள் இருக்கிறீர்களா?

ஜெயந்தி said...

விபத்திலிருந்து தப்பி வந்தது மகிழ்ச்சி. இதைப்படிக்கும்போதே பதறுகிறது.

பா.ராஜாராம் said...

பதறவைக்கும் இடுகை குன்றா.முதலில் பாக்தாத் என்று தளத்தில் பார்த்த போதே கலக்கமாக இருந்தது.பத்ரம் மக்கா.தொடருங்கள்.பகிர்தல் வலி மறக்க உதவியாக இருக்கும்.

சே.குமார் said...

விபத்திலிருந்து தப்பி வந்தது மகிழ்ச்சி.

பூங்குன்றன் வேதநாயகம் said...

இந்த பதிவின் வாயிலாக என் கதையை சொன்னதும், நான் விபத்தில் தப்பியதை பின்னூட்டம் இட்டும்,ஓட்டும் குத்தி,வாழ்த்தும் சொன்ன என் அன்பு நண்பர்கள்

@ அன்புடன் மலிக்கா

@ நாஞ்சில் பிரதாப்

@ மரியா அண்ணா

@ விஜய்

@ முனைவர்.இரா.குணசீலன்

@ ஜெயந்தி

@ பா.ராஜாராம்

@ சே.குமார்

அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றிகள் !!!